சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்ற தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து கிரெடாய் (CREDAI) தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கடந்த ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் புதிய கட்டுமானங்களுக்கு தடை விதித்தது. இதன் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) அந்தப் பகுதியில் கட்டிட அனுமதிகளை நிறுத்தி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
விசாரணையின் போது, பள்ளிக்கரணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெட்ரோ ரயில், பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அறிவியல் அடிப்படையிலான முழுமையான கள ஆய்வு இல்லாமல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கிரெடாய் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், இந்தத் தடை காரணமாக நில உரிமையாளர்கள் மற்றும் கட்டுமானத் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவியல் ஆய்வின் அடிப்படையில் தடை விதிக்கப்படும் எல்லையை மறுநிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், பசுமை தீர்ப்பாய உத்தரவு காரணமாக பள்ளிக்கரணை சுற்றுவட்டாரத்தில் கட்டிட அனுமதி கோரி பெறப்பட்ட 47 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பினரின் வாதங்களையும் பதிவு செய்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.