சென்னையில் பட்டப்பகலில் சுமார் 15 பேர் கொண்ட மதுபோதைக் கும்பல் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மதுபோதையில் இருந்த கும்பல் வாகனங்களை சேதப்படுத்தி, அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நயினார் நாகேந்திரன், தலைநகரிலேயே பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் காவல்துறை கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.