ஹொடைடா (ஏமன்): செங்கடலில் ஏமன் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய மர்மக் கும்பல் தாக்குதல் நடத்தியதாக பிரிட்டன் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஏமனின் ஹொடைடா நகருக்கு தென்மேற்கே சுமார் 30 கடல் மைல் (55 கிலோமீட்டர்) தொலைவில் நடைபெற்றதாக பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது. தாக்குதல் குறித்து கப்பலில் இருந்த பணியாளர்களே அதிகாரப்பூர்வமாக தகவல் அளித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான கப்பலின் பெயர், அதில் பயணித்தவர்கள், ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஆயுதக் குழுவும் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை.
தாக்குதல் நடைபெற்ற பகுதி, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். கப்பல்களை மீண்டும் குறிவைத்து தாக்குவோம் என ஹவுதி அமைப்பு முன்பே எச்சரித்திருந்தாலும், இந்த தாக்குதலில் அவர்களின் தொடர்பு உறுதி செய்யப்படவில்லை.
காசா போர் தொடங்கியதிலிருந்து, செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் நீரிணை வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் பலமுறை நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக, பல சர்வதேச கப்பல் நிறுவனங்கள் சூயஸ் கால்வாய் வழித்தடத்தைத் தவிர்த்து, ஆப்பிரிக்காவின் கேப் ஆஃப் குட் ஹோப் வழியாக நீண்ட பாதையில் கப்பல்களை இயக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், ஏடன் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய கடற்பகுதிகளில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலும் மீண்டும் அதிகரித்து வருவதாக கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
