மதுரையில் ‘ரீல்ஸ்’க்காக சாகச ரைடு: 7 இளைஞர்கள் மீது போலீஸ் நடவடிக்கை

 

மதுரை: சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ பதிவிடும் நோக்கில், மதுரை மாநகரில் அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த 7 இளைஞர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரை மாநகரில் சாலை விபத்துகளை குறைத்து, போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்படி, போலீஸார் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 8 அன்று சில இளைஞர்கள் மதுரை – புதுநத்தம் சாலை மற்றும் பைபாஸ் சாலை பகுதிகளில், அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டியதுடன், முன்சக்கரத்தை உயர்த்தி ‘வீலிங்’ உள்ளிட்ட ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சாகசங்களை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்டதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதன்பேரில், ஆலங்குளம், இளமனூர், வடக்கு மாசி வீதி, கருப்பாயூரணி மற்றும் தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்கள் பயன்படுத்திய விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மொத்தமாக ரூ.14,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக பொதுச்சாலைகளில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற விதிமீறல்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் மதுரை மாநகர போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Previous Next

نموذج الاتصال