புதுடெல்லி: பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்துக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.1,021 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை (ED) முடக்கியுள்ளது.
அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து திரட்டப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின் அடிப்படையில், தற்போது ரூ.1,021 கோடி மதிப்பிலான கூடுதல் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த வழக்குகளில் இதுவரை முடக்கப்பட்ட மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.20,367 கோடியாக உயர்ந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையின் தகவலின்படி, மேற்கண்ட நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து ரூ.15,548 கோடி திரட்டப்பட்டதாகவும், அந்த நிதி குழுமத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டதாகக் கூறப்படும் சில நிறுவனங்கள் வழியாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முடக்கப்பட்ட சொத்துகளில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திடம் இருந்த முதலீடுகள் மற்றும் சாசன் பவர் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய நிதி தொடர்பான சொத்து உரிமைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கை பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை இந்த குழுமம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 வழக்குகளும், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் ஒரு பகுதியாக 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், FEMA சட்டத்தின் கீழ் ரூ.77.86 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும், குழுமத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.