சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, வாயலூர் (Vayalur, Ponneri, Tiruvallur) பகுதியில் அமைக்கப்பட்டு வரும் எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகளை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) தென் மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி தாக்கல் செய்த மனுவில், டான்ஜெட்கோ (TANGEDCO) நிறுவனம் சார்பில் 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு 2014-ஆம் ஆண்டு கடற்கரை ஒழுங்குமுறை (CRZ) விதிகளின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதாகவும், அந்த அனுமதி காலாவதியான பின்னரும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance - EC) கடந்த ஆண்டு டிசம்பருடன் காலாவதியானது என்றும், அதனை புதுப்பிக்க டான்ஜெட்கோ இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கவில்லை என்றும் அமர்வு குறிப்பிட்டது.
செல்லுபடியாகும் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாத நிலையில் கட்டுமானப் பணிகளை தொடருவது பொருத்தமல்ல எனக் கூறிய தேசிய பசுமை தீர்ப்பாயம், 4 வாரங்களுக்கு அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதித்துள்ளது.
மேலும், டான்ஜெட்கோ நிறுவனம் உரிய அதிகாரிகளிடம் சுற்றுச்சூழல் அனுமதியை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்றும், புதிய அனுமதி கிடைத்த பிறகே பணிகளை மீண்டும் தொடரலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.