மாலியில் கடத்தப்பட்ட இந்திய வைர தொழிலதிபர் ரூ.44 கோடி பிணைப்பணத்துக்குப் பின் மீட்பு

 

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைர தொழிலதிபர் திரு ரமணி, அவரது குடும்பத்தினர் ரூ.44 கோடி மதிப்பிலான பிணைப்பணம் செலுத்தியதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயதான திரு ரமணி, சூரத் வைர வர்த்தகத்துடன் தொடர்புடையவர். பின்னர் அமெரிக்காவில் குடியேறிய அவர், குடும்பத்தினருடன் இணைந்து சர்வதேச வைர வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் மாலியில் தங்கச் சுரங்கம் ஒன்றை வாங்கியிருந்த அவர், அங்கு தங்கியிருந்தபோது கடந்த ஏப்ரல் மாதம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


ஆரம்பத்தில் அவரை விடுவிக்க சுமார் ரூ.100 கோடி பிணைப்பணம் கோரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், 4 மில்லியன் யூரோ (சுமார் ரூ.44 கோடி) வழங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


பிணைப்பணம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து திரு ரமணி விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் தற்போது மாலியிலேயே உள்ளார். கடத்தல் சம்பவம் மற்றும் விடுதலை தொடர்பான சூழ்நிலைகள் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த மீட்பு நடவடிக்கையில் இந்திய அரசின் எந்த அமைப்பும் நேரடியாக ஈடுபடவில்லை என்றும், பேச்சுவார்த்தை மற்றும் பிணைப்பண ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினரே மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Next

نموذج الاتصال