ராமேசுவரம் அருகே ரூ.42.90 கோடியில் உலகத் தர ஒலிம்பிக் நீர் விளையாட்டு மையம்; திறப்பு விழாவுக்கு தயாரான பிரப்பன்வலசை

 ராமேசுவரம், ராமநாதபுரம்: தமிழகத்தில் நீர் விளையாட்டுத் துறையை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசையில் ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் நீர் விளையாட்டு மையம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயாராகியுள்ளது. இந்த மையம் திறக்கப்பட்ட பிறகு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நீர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதுடன், உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டின் 1,076 கிலோமீட்டர் நீள கடற்கரையில், அதிகபட்சமாக 237 கிலோமீட்டர் கடற்கரைப் பகுதியைக் கொண்டுள்ள ராமநாதபுரம் மாவட்டம், நீர் விளையாட்டுகளுக்கான முக்கிய மையமாக விளங்கி வருகிறது. குறிப்பாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி மற்றும் பிரப்பன்வலசை பகுதிகள் அலைச்சறுக்கு (Surfing), செயிலிங் (Sailing), கயாக்கிங் (Kayaking), கேனோயிங் (Canoeing), நீச்சல் உள்ளிட்ட பல்வேறு கடல் விளையாட்டுகளுக்கு ஏற்ற இயற்கை சூழலை கொண்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வீரர், வீராங்கனைகள் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையிலான பாக் நீரிணை பகுதியில் மராத்தான் மற்றும் ரிலே நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இதன் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சர்வதேச நீர் விளையாட்டு மையமாக மாற்றும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

2024-25 தமிழக பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த திட்டத்தின் அடிப்படையில், பிரப்பன்வலசை கடற்கரையில் 7 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் உருவாக்கப்பட்டது. கடல் நீரின் தரம், அலை ஓட்டம், காற்றின் வேகம் உள்ளிட்ட அம்சங்கள் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்ட பிறகே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த ஒலிம்பிக் நீர் விளையாட்டு வளாகத்தில் நவீன தங்குமிட வசதி (ஹாஸ்டல்), உலகத் தர ஜிம், வாட்டர் ஸ்போர்ட்ஸ் மையம், செயில் படகு நிறுத்துமிடம், யோகா மையம், படகு ஹேங்கர், திறந்தவெளி ஓய்வு பகுதி மற்றும் உலகத் தர பயிற்சி & பயிற்சியாளர் அகாடமி ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு Sailing, Canoeing, Surfing, Kayaking, Stand-Up Paddle (SUP) உள்ளிட்ட ஒலிம்பிக் நீர் விளையாட்டுகளுக்கான சர்வதேச தரப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் பயிற்சி பெறவும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் இந்த மையம் முக்கிய தளமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்து, திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தமிழக முதல்வர் விஜய் இந்த உலகத் தர ஒலிம்பிக் நீர் விளையாட்டு மையத்தை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Previous Next

نموذج الاتصال