சென்னை: நாட்டின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) இன்று (ஜூலை 17) தொடங்கியுள்ளது. இந்தப் பதிவு ஜூலை 31 வரை நடைபெறும்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக இயக்குநர் சுந்தரேஷ் பாபு, மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவித்தார். முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும்.
பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை அதிகாரப்பூர்வ சுய கணக்கெடுப்பு இணையதளமான https://se.census.gov.in-ல் பதிவு செய்யலாம். 16 மொழிகளில் தகவல்களை பதிவேற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுய கணக்கெடுப்பை முடித்த பிறகு வழங்கப்படும் அடையாள எண்ணை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக இது நடைபெறுகிறது. வீட்டு வசதி, குடிநீர், மின்சாரம், இணைய வசதி, கழிவறை, சமையல் எரிபொருள், வாகனங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
முதல் கட்ட பணிகளுக்குப் பிறகு, 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.