மதுரை: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்மொழியப்பட்டுள்ள தரிசனக் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய காலக்கெடுவை ஜூலை 21 வரை நீட்டித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த பா. இராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனம், பூஜை மற்றும் சிறப்பு சேவைகளுக்கான கட்டண உயர்வு குறித்து பொதுமக்களின் கருத்து பெறும் அறிவிப்புகள் பரவலாக வெளியிடப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்புகளை இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், மாவட்ட இணையதளம் மற்றும் கோயில் வளாகத்தில் பக்தர்கள் எளிதில் காணும் வகையில் வெளியிட வேண்டும் என்றும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
மனுதாரர் தனது மனுவில், திருச்செந்தூர் கோயிலுக்கு அறங்காவலர் குழு இன்னும் அமைக்கப்படாத நிலையில், தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், அது சட்டபூர்வமான நடைமுறைக்கு முரணானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, மனுதாரர் ஏற்கனவே தனது ஆட்சேபனையை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது ஆட்சேபனைகளை பதிவு செய்ய வழங்கப்பட்டிருந்த ஜூலை 7 காலக்கெடுவை ஜூலை 21 வரை நீட்டிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
