மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மும்பை, புனே, தானே, நவி மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாசிக் மாவட்டத்தில் மேகவெடிப்பு போன்ற அதிதீவிர மழை பெய்யும் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக புனே – மும்பை விரைவுச்சாலை மற்றும் பழைய புனே – மும்பை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மும்பையில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பையில் வரலாறு காணாத மழை
ஜூலை 1 முதல் மும்பையின் சாண்டாக்ரூஸ் பகுதியில் 805.6 மி.மீ. மழையும், கொலாபா பகுதியில் 744.2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெலாபூர், நவி மும்பை, தானே, கல்யாண், வசாய் மற்றும் பால்கர் பகுதிகளிலும் கடும் மழை நீடித்து வருகிறது.
13 பேர் பலி; போக்குவரத்து கடும் பாதிப்பு
மன்குர்டில் நான்கு மாடிக் கட்டிடம் அருகிலிருந்த குடிசை மீது இடிந்து விழுந்ததில் ஐந்து குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மரங்கள் முறிந்து விழுந்தது உள்ளிட்ட மழை தொடர்பான பல்வேறு விபத்துகளில் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.
மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 217 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நாசிக்கில் மேகவெடிப்பு அபாயம்
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "ஒரு மாதத்திற்கான சராசரி மழை நான்கு நாட்களிலேயே பதிவாகியுள்ளது. மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நாசிக் மாவட்டத்தில் 300 மி.மீ. வரை மழை பெய்யக்கூடிய மேகவெடிப்பு போன்ற சூழல் உருவாகும் அபாயம் இருப்பதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், சில சாலைகள் மற்றும் முக்கிய யாத்திரைத் தலங்களும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன.
