தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 1,155 ரவுடிகள் கைது

 

சென்னை:


தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல்துறை நடத்திய சிறப்பு சோதனையில் 1,155 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மாநிலம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களின் மேற்பார்வையில் ஒரே நேரத்தில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, போதைப்பொருள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய ரவுடிகள் மீது காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொண்டது.


சோதனையின்போது தலைமறைவாக இருந்த பல ரவுடிகள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இதுபோன்ற சிறப்பு சோதனைகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Previous Next

نموذج الاتصال