புதுடெல்லி:
பொதுத் தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவுகளை தடுக்க கடுமையான சட்டத் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, வினாத்தாள் கசிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் வகையில் சட்டம் திருத்தப்பட உள்ளது.
மேலும், இதுபோன்ற வழக்குகளின் விசாரணையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவும், விரைவு நீதிமன்றங்கள் மூலம் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கவும் சட்டத்தில் புதிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
தற்போது நடைமுறையில் உள்ள பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
வினாத்தாள் கசிவால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க கடுமையான தண்டனை மற்றும் விரைவான நீதிமன்ற நடவடிக்கைகள் அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.