No results found

    இறந்தவரின் அறையை பயன்படுத்தக் கூடாதா? பாவமா?


    இந்தப் பதிவில் நாம் இரண்டுவிதமான தகவல்களை பார்க்கப்போகிறோம். 

    முதலில் ஆகாத நட்சத்திரங்கள் பற்றி பார்ப்போம். 

    ஆகாத நட்சத்திரங்கள் இதற்கு மற்றுமொரு பெயர் தீதுறு நட்சத்திரங்கள் என்றும் அழைப்பர். 

    இதை ஜோதிடம் ஒரு பாடலாகவே படைத்துள்ளது, அந்தப் பாடல்... 

    “ஆதிரை பரணி கார்த்திகை 

    ஆயில்யம் முப்பூரங் கேட்டை

    தீதுறு விசாகஞ் சோதி

    சித்திரை மகமீராறும்

    மாதனங்கொண்டார் தாரார்

    வழிநடைப்பட்டார் மீளார்

    பாயதனிற் படுத்தார் தேறார்

    பாம்பின் வாய் தேரைதானே”


    இதுதான் அந்தப் பாடல், இதற்கான விளக்கம்.....!


    (ஆதிரை) - திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி இவை மூன்றும் சேர்த்துத்தான் முப்பூரம் ஆகும்.  விசாகம்,சுவாதி, சித்திரை, மகம் இந்த ஈராறும் அதாவது ரெண்டாறு பனிரெண்டு என்ற வாய்ப்பாடு போல பனிரெண்டு நட்சத்திரங்களும் தீதுறு அல்லது ஆகாத நட்சத்திரங்களாம். 

    இதில் செய்யக்கூடாத விஷயங்கள். 

    இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுத்தால் கொடுத்த கடன் திரும்ப வராது. 

    நீண்ட தூர பயணம் அதாவது ஷேத்திராடனம் எனும் ஆன்மிகப் பயணம் செய்தால் திரும்ப வரமாட்டார். பெரும் நோய் வந்து மருத்துவமனை சென்றால் நோயும் நீங்காது. உடல்நலமும் தேறமாட்டார். 

    இந்த மூன்று விஷயங்கள் மட்டுமல்ல... கூடுமான வரை திருமணம், கிரகப்பிரவேசம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. 

    இன்னும் விரிவாகப் பார்ப்போமா? 

    கடன் கொடுத்தால் திரும்ப வராது... அப்படியா?  

    கடன் வாங்கியவர் ஏமாற்றிவிடுவாரா? ஆமாம். ஏமாற்றுவார் அல்லது இந்த நட்சத்திர நாளில் வாங்குவதாலேயே எந்த நோக்கத்திற்காக கடன் வாங்கினாரோ அந்த நோக்கம் நடைபெறாமல் அந்த பணம் முடங்கிப்போகும். அப்படி முடங்கிப்போனவரிடம் கடனைத் திரும்பக் கேட்டால் அவரால் எப்படி தரமுடியும்.  அவரால் செய்ய முடிந்தது என்னவென்றால்.. ஒன்று அவர் உங்கள் கண்ணில்படாமல் மறைந்து வாழ்வார். அல்லது உங்களை சந்திப்பதையே தவிர்ப்பார். உங்கள் போனை எடுக்கமாட்டார். இதற்கு தீர்வுதான் என்ன? கொடுத்த கடனை மறப்பது மட்டுமே தீர்வு! 

    அடுத்து... தீர்த்தயாத்திரை எனும் ஆன்மிகப் பயணம் செல்பவர்கள் திரும்ப வரமாட்டார்கள் என்பது எந்தளவுக்கு உண்மை?

    அந்தக் காலத்தில் தீர்த்தயாத்திரை செல்பவர்கள் தங்கள் குடும்பக் கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வயதான காலத்தில் நடைபயணமாகவோ மாட்டுவண்டி பயணமாகவோ செல்வார்கள். பருவநிலை, நீண்ட பயணத்தால் வரும் சோர்வு, வயது மூப்பு இவற்றின் காரணமாக திரும்ப வருவது என்பது இயலாத காரியம். அதிலும் இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளப்படும் பயணம் அதை உறுதியாக்கிவிடும். 

    ஆனால் இப்போது அப்படி இல்லையே! விமானப் பயணம், அதிவிரைவு ரயில், கார், பேருந்து என பலவிதமான வாகன வசதிகள் வந்துவிட்டதால் இந்த “வழிநடைபட்டார் மீளார்” என்பது இந்த காலத்தில் ஒத்துப்போகாது. ஆனால் இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளப்படும் பயணங்கள்... எந்த நோக்கத்திற்காக பயணிக்கிறோமோ அந்த நோக்கம் நடைபெறுவதில் தாமதத்தையும் தடையையும் ஏற்படுத்தும். 

    மூன்றாவது விஷயம்... உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நட்சத்திர நாட்களில் மருத்துவமனையில் சேர்ந்தால் நோய் நீங்காது என்பது சரியா? 

    இதில் ஓரளவு உண்மை உண்டு. அதற்காக பிரசவ வலியில் இருப்பவரையும், மாரடைப்பு ஏற்பட்டவரையும் நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டா இருக்க முடியும்? எனவேதான் இதில் ஓரளவுக்கு மட்டுமே உண்மை என்று சொன்னேன்.

    நீண்டநாள் நோய்களுக்கு மருந்து உண்ண ஆரம்பிக்கும்போதும், மாற்று மருத்துவம், அல்லது மாற்று மருத்துவரின் ஆலோசனை ( second opinion) பெறவும் இந்த நட்சத்திர நாட்களை தவிர்ப்பது நல்லது.  

    ஜோதிடம் தோன்றும் போது பெரிய விஞ்ஞான வளர்ச்சி பெறவில்லை. அதன் அடிப்படையில் இம்மாதிரியான பலன்களை எழுதி வைத்தனர்.  

    இன்னொரு விஷயம்... ஆதியில் ஜோதிடமும் ஜோதிடத்திற்கு அடிப்படையான பஞ்சாங்கமும் மனிதனின் தேவைகளுக்காக கணக்கிடப்படவில்லை. முழுக்க முழுக்க வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து மட்டுமே கணக்கிடப்பட்டு, பயன்படுத்தப்பட்டது. அதில் ஓரளவு மனிதனின் எதிர்காலம் பற்றியும் கணக்கிடப்பட்டதே தவிர மனிதனுக்காகவே ஜோதிடம் உண்டானது என்பது கிடையாது. 

    அடுத்து “தனிஷ்டாபஞ்சமி” என்னும் அடைப்பு நட்சத்திரங்கள்.. பற்றி பார்ப்போம்! 

    வீட்டில் ஒருவர் இறந்தால், அவர் இறந்த அன்று என்ன நட்சத்திரம் என்பதை பார்க்கவேண்டும். அது அடைப்பு நட்சத்திரமாக இருந்தால் அதற்கான பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும், இது மிக முக்கியமான விஷயம். 

    அவிட்டம், சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி,

    ரோகிணி, கார்த்திகை, உத்திரம், மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம்,

    இந்த நட்சத்திர நாட்களில் இறந்தால்.... அவர் இருந்த அறையை பூட்டி வைக்க வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் “வெண்கல விளக்கு (புதியது) வைத்து விளக்கேற்றி வரவேண்டும். அந்த அறையை  வேறு யாரும் உபயோகிக்க கூடாது.  

    “ஏன் சார் நாங்க இருக்கிறதே ஒத்தை ரூம், ரெட்டை ரூம்னு ஒண்டுக் குடித்தனம். இதுல எங்க ரூமை பூட்றது? “ என நீங்கள் கேட்பது புரிகிறது! 

    இதுவும் அந்தக் காலத்திய வாழ்வு முறையை அடிப்படையாக வைத்துதான் எழுதி வைத்தார்கள். அந்தக் காலத்தில் வயது முதிர்ந்தவர்களை படுத்த படுக்கையானவுடன் தனியறையில் வைத்து கவனித்துக் கொள்வார்கள். அவர் இறந்தவுடன் அந்த அறையை பூட்டி வைப்பதுடன் வேறுயாரும் புழங்க மாட்டார்கள். ஆனால் இந்தக் காலத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பது தெரியும். எனவே எளிமையான ஒரு பரிகாரம் சொல்கிறேன். அதை மட்டுமாவது செய்யுங்கள். 

    அதற்கு முன்பாக எந்த நட்சத்திரத்திற்கு எத்தனை காலம் அறையை பூட்டி வைக்கவேண்டும் என்பதை பார்த்துவிடுவோம். 

    அவிட்டம், சதயம், பூரட்டாதி,உத்திரட்டாதி, ரேவதி இந்த ஐந்து நட்சத்திர நாட்களில் இறந்தால் 6 மாத காலத்திற்கு பூட்டி வைக்க வேண்டும்.

    ரோகிணி நட்சத்திரமாக இருந்தால் 4 மாதம் பூட்டிவைக்க வேண்டும்.

    கார்த்திகை உத்திர நட்சத்ரங்களாக இருந்தால் 3 மாதம் பூட்டி வைக்கவேண்டும்.

    மிருக சீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம்,உத்திராடம் இந்த நட்சத்திரங்களாக இருப்பின் 2 மாதம் பூட்டி வைக்க வேண்டும். 

    ஆனால் வெண்கல விளக்கு கொண்டு ஏற்றுவது தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலம் முடிந்த உடன் அந்த விளக்கை தானமாக யாருக்காவது தரவேண்டும்,

    எங்களால் இப்படி அறையைப் பூட்டி வைக்க முடியாது, அதுவும் இவ்வளவு மாதங்களுக்கு பூட்டுவதெல்லாம் முடியவேமுடியாது என்பவர்களுக்கு... 

    புதிய வெண்கலக் கிண்ணம் ஒன்றை வாங்கி அதில் நல்லெண்ணெய் நிரப்பி யாருக்காவது தானம் தந்தால் போதும், பிரச்சினை தீரும். 

    இதை செய்ய முடியாது போனால் என்னாகும்?  

    இறந்தவருக்கு யார் ஈமகாரியம் செய்தார்களோ அவருக்கு இந்த குறிப்பிடப்பட்ட காலம் வரை கண்டம் உண்டாக வாய்ப்பு உள்ளது என்கிறது ஜோதிட சாஸ்திரம். 

    அதுமட்டுமல்ல இறந்தவரின் ஆத்மா, குறிப்பிட்ட காலம் வரை இங்கேயே சுற்றும். அந்த ஆன்மாவின் சாந்தி அடையவே இந்த பரிகாரம் தரப்பட்டுள்ளது.  

    Previous Next

    نموذج الاتصال