No results found

    உதகையில் மட்டுமே கற்பிக்கப்படும் வன விலங்கு உயிரியல் பாடம்!


    உலக வெப்பமயமாதல் விளைவாக வறட்சி, பருவமழை தவறுதல், பேரிடர் அபாயம் என பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கிறோம். தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் மேற்குத்  தொடர்ச்சி மலைப் பகுதியிலேயே போதுமான மழையின்றி, வறட்சி நிலவுகிறது. ஆனால், அசாம், மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளன.

    எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு புவி வெப்பமயமாதலை தடுப்பது உள்ளிட்டவை குறித்தெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகியுள்ளது. குறிப்பாக,  மாணவர்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

    இந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,  சுற்றுச்சூழல் மற்றும் வனத்தைப் பாதுகாப்பது தொடர்பான பட்டப் படிப்பு உதகையில் நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே,  உதகை அரசு கலைக் கல்லூரியில் மட்டும் இந்த பட்டப் படிப்பு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ம.ஈஸ்வரமூர்த்தியிடம் பேசினார்.

    “நீலகிரி மாவட்டம் உதகையில் ஆங்கிலேயர்களால் முதன்முதலில் கட்டப்பட்ட கட்டிடம் ‘ஸ்டோன் ஹவுஸ்’.  அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் கோடைகால தலைமையகமாக இது செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தில் 1955-ல் அரசு  கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது. இதுவரை ஏழை மக்களின் உயர் கல்விக் கனவை நனவாக்கும் இடமாக இக்கல்லூரி செயல்படுகிறது. 

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் தற்போது தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வேதியியல், இயற்பியல் என 12-க்கும் மேற்பட்ட துறைகளில், இளநிலை, முதுநிலை மற்றும்  முனைவர் பட்ட வகுப்புகள் நடைபெறுகின்றன. நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் மாணவ,  மாணவிகள் இங்கு பயில்கின்றனர். 

    ஏறத்தாழ 200-க்கும் அதிகமான பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். கல்லூரிக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் இளநிலை வன விலங்கு உயிரியல், ராணுவத்தில் சேர உதவும் இளநிலை பாதுகாப்பியல் படிப்புகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன” என்றார்.

    “ஆரம்பத்தில் வன விலங்கு உயிரியல் துறை  குறித்து மாணவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், இந்தப் பாடப் பிரிவைத்  தேர்வுசெய்ய மாணவர்கள் தயக்கம் காட்டினர்.  தற்போது காடுகள் மற்றும் காட்டுயிர் ஆய்வுகளில் ஆர்வமுள்ள மாணவர்கள் பலர்,  இந்தப் பாடத்தை தேர்வு செய்கின்றனர்” என்கிறார் விலங்கியல் மற்றும் வன உயிரியியல் துறை உதவிப் பேராசிரியர் பி.ராமகிருஷ்ணன்.

    “வைல்டு லைஃப் பயாலஜி எனப்படும் வன உயிரியல் இளநிலை அறிவியல் பாடப் பிரிவு இந்தக் கல்லூரியில் மட்டுமே உள்ளது. 2005-ம் ஆண்டில் சுயநிதி முதுநிலை படிப்பு மட்டுமே இருந்தது.  2010-ல் இந்தப் படிப்பும் அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, பல்கலைக்கழக விதிமுறையின்படி இளநிலை பாடப் பிரிவு கொண்டுவரப்பட்டது.

    இளநிலை வனவிலங்கு உயிரியல் படிப்புக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள எந்தக் கல்லூரிக்கும் இத்தனை இடங்கள் ஒதுக்கப்படவில்லை. உதகை அரசு கலைக் கல்லூரிக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டது, கல்லூரியின் தரத்தை பறைசாற்றுகிறது.

    வனப் பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் இந்தப் பிரிவு இருப்பதால், வகுப்பறை மட்டுமல்லாது களத்திலும் நேரடி பயிற்சிபெற மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பாடத்தைத் தேர்வுசெய்து படிப்பதன் மூலம், வன விலங்கு ஆய்வுகளிலும் ஈடுபடலாம். மேலும், வனத் துறை பணிகளிலும் முன்னுரிமை கிடைக்கும். 

    அதேபோல,  வனத் துறை அதிகாரி பணியிடங்களுக்கும், இந்தப் பாடத்தைப் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு  அரசிடம் கோரியுள்ளோம்.

    இன்றைய சூழலில்,  காடுகள் பாதுகாப்பு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்றாகும். இந்தப் படிப்பை படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் தேடி வருகின்றன. ஏழை மாணவர்கள், அரசு உதவியால் இளநிலை முதல் முனைவர் பட்டம் வரை இங்கு தடையின்றி கல்வி கற்கலாம். மேலும், இந்தப் படிப்பின் மூலம் மாணவர்கள் சூழலியலைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவர். வன விலங்கு உயிரியல் படிப்பில் சேர 11, 12-ம் வகுப்புகளில் உயிரியல், வேதியியல் படித்திருக்க வேண்டும்”  என்றார்.

    இந்தத் துறையில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்தால்,  மாணவர்களிடம் இன்னும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

    Previous Next

    نموذج الاتصال