அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் குணங்களையும் வாழ்வியலையும் பார்த்து வருகிறோம். இப்போது அஸ்வினியின் 4 பாதங்களின் தனித்துவத்தை அறிந்து கொள்வோமா?
அதற்கு முன்பாக அஸ்வினியில் பிறந்த அஸ்வத்தாமன் பற்றிப் பார்ப்போம்.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருவான துரோணாச்சார்யாரின் புதல்வன்தான் அஸ்வத்தாமன். இவன் ஒரு சிரஞ்ஜீவி. ஆம்... மரணமில்லாதவன் அஸ்வத்தாமன்!.
பிறக்கும்போதே நெற்றியில் மாணிக்கக்கல்லோடு பிறந்தவன். போர்க்கலைகளில் சூரன். தன் தந்தை வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட கோபத்தில் குருஷேத்திரப் போரின் 18வது நாளில் பாண்டவர்களின் ஐந்து மகன்களையும் (பாண்டவர்கள் என நினைத்து) கொன்று தீர்த்தான். தவறாகக் கொன்றதை உணர்ந்து பிரம்மாஸ்திரத்தை எடுத்தான். வியாசரால் தடுக்கப்பட்டான்.
எடுத்த பிரம்மாஸ்திரத்தைத் திரும்ப வைக்க முடியாது என்பதால், அபிமன்யுவின் மனைவி உத்ரையின் கருவில் இருந்த குழந்தையை பிரம்மாஸ்திரத்தால் அழித்தான். இப்படி பாண்டவர்களின் வம்சத்தையே பூண்டோடு அழித்தவன் இவன்.
இதனால் கோபம்கொண்ட கிருஷ்ணர் அவன் நெற்றியில் இருந்த மாணிக்கக் கல்லை எடுத்துக்கொண்டார். அந்த கல்லை எடுத்ததால் ஏற்பட்ட புண் ஆறாது என்றும், இந்த பூமி அழியும் வரை இங்கேயே இருக்க வேண்டும் என்றும் சாபம் தந்தார். இதன் காரணமாகவே இன்றும் அஸ்வத்தாமன் இந்த பூமியிலேயே சுற்றிக்கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது.
யாரெல்லாம் துரோகத்தால் வீழ்த்தப்படுகிறார்களோ, ஏமாற்றப்படுகிறார்களோ அவர்களுக்கு அருவமாக துணையிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இந்த மொத்த விளக்கமும் அஸ்வினி 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்குப் பொருந்தும்.
மேலும், அவசரச் செயல், சுறுசுறுப்பு, பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாத குணம், வீரதீரச் செயல்கள், விளையாட்டு வீரர்கள், உயிரைப் பற்றி கவலைப்படாத அச்சமூட்டும் விளையாட்டுக்கள் (இரண்டு மலைகளுக்கிடையே கயிறு கட்டி நடப்பது, கார், பைக் ரேஸ், பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் மலையேற்றம்) கட்டுமானத்தொழில், ஆயுத உற்பத்தி, கொல்லன் பட்டறை, சிகையலங்காரம். மருத்துவம், எலும்பு நிபுணர், பல் மருத்துவம்,காவல்துறை, ராணுவம் உடற்பயிற்சிக் கூடம், தற்காப்புக் கலை பயிற்றுனர் என அனைத்தும் அஸ்வினி 1ம் பாதம் தொடர்பு உடையவை.
மேலும் அதிக காரமான உணவு விருப்பம், உயர் ரத்த அழுத்தம், அடிக்கடி காயப்படுதல், எலும்பு முறிவு,மதுப்பழக்கம், அதிகாரத்தொனி, ஆணவம், சுயகௌரவம் இவையும் அஸ்வினி 1 ம்பாத தன்மைகள்.
இவர்கள் நிதானம் காப்பதும், பொறுமையாக சிந்திப்பதும், மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதும் நல்லது. மேலும் யோகாசனம்,தியானம், மூச்சுப்பயிற்ச்சி செய்வது நல்லது. கார உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சரி... அஸ்வினி நட்சத்திரத்தின் 1ம் பாதத்தில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களைப் பார்ப்போமா?
அஸ்வினி 1 ம் பாதத்திற்கான விருட்சம்
விருட்சம் - எட்டி மரம் (முடிந்தால் இந்த மரத்தை வளர்த்து வாருங்கள்)
இறைவன் - திருச்செந்தூர் முருகன்.
வண்ணம் - அடர் சிவப்பு, மஞ்சள்
அஸ்வினி நட்சத்திரத்தின் 2 ம் பாதத்தில் உள்ளவர்களுக்கு :
உழைப்பில் சலிப்பில்லாதவர்கள். எளிதில் மற்றவர்களுடன் நட்பில் இணைபவர்கள். மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே இருப்பவர்கள். தன் கருத்தில் உறுதியாக இருப்பவர்கள்.
எந்த ஒரு விஷயத்திலும் தெளிவாக முடிவெடுப்பவர்கள். சபை கூச்சம் இல்லாதவர்கள். மேடைப்பேச்சில் வெளுத்து வாங்குபவர்கள். எட்டுக்கட்டையில் குரல் வளம் இருக்கும். அலுவலக கருத்து பரிமாற்றம் முதல் தொழில் சார்ந்த பேச்சுவார்த்தை வரை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தன் கருத்தை வெளிப்படுத்துபவர்கள். எந்த பிரச்சினையையும் பேசியே சமாளிப்பவர்கள்.
உணவுப்பிரியர், சமையல் கலையில் தேர்ந்தவர். உணவகம், கேட்டரிங் தொழில் செய்பவர். .
ஆரோக்கியம் தொடர்பாக அடிக்கடி வாய்ப்புண், அல்சர், பாலியல் நோய் தொற்று ஏற்படும்.சுய விருப்பத்திற்காக அதிகம் செலவு செய்பவர்கள்.
அசையா சொத்துக்களாக வாங்குபவர்கள். ஆபரணப் பிரியர்கள். எந்த வகையிலாவது பணப்புழக்கத்தில் இருந்து கொண்டே இருப்பார்கள்.
உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு வேண்டும். அஜீரணப் பிரச்சினை இருப்பதால் எளிதில் செரிமானமாகும் உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். கார உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அஸ்வினி 2 ம் பாதத்திற்கான விருட்சம்-
விருட்சம்- மகிழம் மரம்
இறைவன்- திரு ஆவினன்குடி (பழனி)
வண்ணம்- வெளிர் நீலம், இளம் சிவப்பு
அஸ்வினி 3ம் பாதம்-
படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகம். விஷய ஞானம் அதிகம் உள்ளவர்கள். எளிதில் கற்றுக்கொள்பவர்கள். கல்வியில் அடிக்கடி தடையைச் சந்திப்பார்கள் (தந்தையின் பணியில் ஏற்படும் இடமாற்றம் காரணமாக). எழுத்தாற்றல் உடையவர்கள். தன் எழுத்தால் அனைவரையும் கவர்பவர்கள், தன்னுடைய எழுத்தில் சொல்லவந்த கருத்தை தெளிவாக விளக்குபவர்கள். எழுத்தாளர்கள், கதாசிரியர்கள்.
தகவல் தொழில் நுட்பத் துறை வல்லுனர்கள். பத்திரிகை, ஊடகங்களில் பணிபுரிபவர்கள். வங்கி அதிகாரி, பத்திரப்பதிவுதுறை, இன்சூரன்ஸ் நிறுவனப்பணி, மருந்து விற்பனை முதலானவற்றில் பணிபுரிவார்கள். ,
கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்கள். இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்பவர்கள். உதாரணமாக கிரிக்கெட்டை டிவியில் பாரத்துக்கொண்டிருந்தாலும், தானே மைதானத்தில் விளையாடுவதாக நினைத்துக்கொள்பவர்கள்.
விரும்பிய உணவை உண்பவர்கள். அதனாலேயே வயிற்றுவலி,செரிமானக் கோளாறு பாதிப்பு உடையவர்கள். தொண்டையில் வலி, டான்சில்ஸ் போன்ற பிரச்சினைகளைக் கொண்டவர். ஒரு அறுவை சிகிச்சையாவது எடுத்துக் கொள்ளும் நிலை இவர்களுக்கு இருக்கும். .
செய்கிற வேலையில் அதிக அழுத்தம் ஏற்படும். கூடுதல் பணிச்சுமை உண்டாகும். மறைமுக எதிரிகள் இருப்பார்கள். இவருடைய கருத்துக்கள், கண்டுபிடிப்புகள் எளிதில் திருடப்படும்.
எந்த ஒப்பந்தங்களாக இருந்தாலும் முழுமையாக படித்துவிட்டே கையெழுத்திடவேண்டும். காசோலைகள் தருவதில் கவனம் வேண்டும். கடன் வாங்கவே கூடாது. கடனால் பிரச்சினைகள் வரும்.
விருட்சம்- பாதாம் மரம்
இறைவன்- சுவாமிமலை முருகன்
வண்ணம்- இளம் பச்சை, ஊதா
அஸ்வினி 4ம் பாதம்-
பயணங்களில் ஆர்வம் உடையவர்கள். தாயன்பு மிகுதியானவர்கள். யோசிக்காமல் உதவி செய்பவர்கள். செய்த உதவியை அப்போதே மறப்பவர்கள். வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவர்கள். அஸ்வினிக்கே உண்டான கோப உணர்வு இல்லாதவர்கள். ஆனாலும் அடுத்தவர்களை சதா நச்சரித்துக்கொண்டே இருப்பவர்கள்.
கலை, இலக்கிய ஆர்வம் இருக்கும். எழுத்துத் துறையில் ஆதிக்கம் செலுத்துபவர்கள். கற்பனைக் கதைகளை புனைபவர்கள். நடந்த விஷயத்தை கற்பனை கலந்து விவரிப்பவர்கள். சொந்தமாக தொழில் செய்வதில் ஆர்வம் இருக்கும்.கட்டுமானத் தொழில் கைகொடுக்கும். மருத்துவத்தொழிலில் சாதிப்பவராக இருப்பார்கள்.
மளிகைக்கடை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர், பால் வியாபாரம், காய்கறி அங்காடி,ஹோட்டல், தேநீர் கடை, சில்லறை வியாபாரக்கடை, டிராவல்ஸ்,டிரான்ஸ்போர்ட், ஓட்டுனர், நடத்துனர், இதுபோன்ற தொழில் அமைப்புகளே அமையும்.
எந்த உணவாக இருந்தாலும் விரும்பி உண்பவர்கள். இன்னதுதான் வேண்டும் என அடம் பிடிக்காதவர்கள். உடல்நலத்தில் அடிக்கடி காய்ச்சல், தலைவலி வரும். நுரையீரல் தொற்று, வீசிங் என்னும் மூச்சிரைப்பு பிரச்சினைகள் இருக்கும்.
விருட்சம்- நண்டாஞ்சு மரம்
இறைவன்- திருத்தணி முருகன் மற்றும் துர்கை
வண்ணம்- வெண்மை, இளம் சிவப்பு
அஸ்வினி நட்சத்திரமா நீங்கள்? அதில் எந்தப் பாதம் உங்களுக்கோ, அதற்கான குணங்களையும் பலன்களையும் கொடுத்திருக்கிறேன். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
அடுத்து... பரணி நட்சத்திரத்தையும் நட்சத்திரத்தின் குணமானது நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்களாக எப்படியெல்லாம் திகழ்கிறது என்பதையும் பார்க்கலாம்.
பரணி என்பது அடுப்பு. அஸ்வினி என்பது குழந்தை. ஒரு குழந்தையின் பசியாற்றுகிற உணவு தேவையெனில், அதற்கு அடுப்பு அவசியம்தானே. அப்படித்தான், பரணி நட்சத்திரமும்!
மேலும், பரணியில் பிறந்தால் தரணி ஆள்வார்கள் என்கிறார்களே. இது சரியா? என்பதையெல்லாம் பார்க்கலாம்.