பரணி நட்சத்திரத்தின் ப்ளஸ் மைனஸைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுகுறித்து இன்னும் சில விஷயங்களைப் பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன்.
இதோ... பரணி நட்சத்திரம் குறித்து இன்னும் சில தகவல்கள்...
“பரணி தரணி ஆளும்” என்பதற்கு சென்ற பதிவில் குடும்பமே உலகம் என வாழ்பவருக்கும் இந்த வாசகம் பொருந்தும் என்று சொன்னேன்.
பரணி நட்சத்திரக்காரர்கள் உணவுப் பிரியர்கள், வடிவமைப்பாளர்கள், கட்டிட வல்லுநர்கள், திறமையான பேச்சாளர்கள்.... என்றெல்லாம் சொன்னது நினைவிருக்கிறதுதானே.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்னொரு முகமும் உண்டு.
அது.... கோபம் வந்தால் கண்மண் தெரியாத அளவுக்கு கோபம் வரும். அந்த கோபம் எப்படிப்பட்டது தெரியுமா? எதிரி வீழும்வரை கோபம் பூமிக்கும் வானுக்குமாக விஸ்வரூபமெடுத்து நிற்கும்; நீடிக்கும். சுருக்கமாகச் சொன்னால் போருக்குச் செல்ல மாட்டார்கள் போர் வந்தால் வெல்லாமல் விடமாட்டார்கள்.
ஆமாம் எதற்காக போருடன் ஒப்பிடுகிறீர்கள்? என்று சிலர் கேட்கலாம்.
பரணி என்பது போர் நட்சத்திரம். ’போர் பரணி’ என கேள்விபட்டிருக்கிறீர்கள்தானே!
இலக்கியத்தில் ’கலிங்கத்து பரணி’ தெரியும் அல்லவா? குலோத்துங்கனின் போர் வெற்றிகளை சொல்வதுதான் கலிங்கத்து பரணி.
மகாபாரதத்தின் முக்கிய கட்டமான “குருக்ஷேத்திர போர்” என்பது தெரியும். அந்த யுத்தம், ஒரு பரணி நட்சத்திரத்தில்தான் தொடங்கியது என்பது தெரியுமா?
பரணியில் போர் செய்தால் பலவிதமான இழப்புகளுக்குப் பிறகு தரணி என்று சொல்லப்படும் இந்த பூமியை ஆளலாம். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் பரணி தரணி ஆளும் என்று சொல்வது எதனால் என்று!
பொதுவாக, பரணி நட்சத்திரக்காரர்கள் மட்டுமல்ல... அனைவருக்குமான தகவல் இது.
எதிரிகளை வெல்ல, வழக்குகளில் வெற்றி பெற,போராட்டங்களை சாதகமாக்கிக் கொள்ள... என எல்லா விஷயங்களுக்கும் எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் பரணி மிக மிக ஏற்றது.
எனவே பரணியில் பிறந்தவர்கள் இயல்பாகவே போராட்ட குணம் வாய்ந்தவர்கள். தோல்விகளை ஏற்காதவர்கள். வெற்றியை மட்டுமே ருசிப்பவர்கள்.
மேலும், பரணி அடுப்பு வடிவம் என்பதால், உணவகங்கள் ஆரம்பிப்பவர்கள் சோதனை முறையாகவும், முதன்முதலில் அடுப்பு பற்ற வைப்பதும் பரணி நட்சத்திர நாளில்தான் செய்வார்கள்.
சரி... பரணி நட்சத்திரக்காரர்களுக்கு நெருங்கிய நட்புடன் இருப்பவர்கள் யார்?
யாரால் அவர்கள் ஆதாயம் அடைவார்கள்?
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்று நட்சத்திரக்காரர்களும் ஆதாயம் தரக்கூடிய, ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களாக அமைவார்கள்.
மிருகசீரிடம், சித்திரை நட்சத்திர நண்பர்களால் லாபம் தரக்கூடிய நட்பு சாத்தியமாகும் என்பது உறுதி.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத்துணையாக வருவது மிகுந்த நன்மையைத் தரும். நட்பாக இருந்தாலும் மிக உத்தமமான பலன்களும் பலமும் உண்டாகும்!
திருவாதிரை, சுவாதி,சதயம். இவர்கள் உங்களிடம் பழகுவதே உங்களிடம் ஆதாயம் பெறுவதற்காக மட்டுமே. ஆகவே, இந்த நட்சத்திரக்காரர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக, உஷாராக, கவனமாக இருப்பது அவசியம்.
பரணி நட்சத்திரக்காரர்களே... உங்களுக்குத் தொல்லை தருபவர்களும், பிரச்சினைகளில் சிக்க வைப்பவர்களும் யார் தெரியுமா? - ரோகிணி, அஸ்தம், திருவோணம். எனவே இவர்களிடம் பழக்கத்தைத் தவிர்ப்பதே நல்லது. இவர்கள் நல்லவர்கள்தான். ஆனால் சூழ்நிலைகளின் காரணமாக அவர்களே அறியாமல் உங்களை சிக்கலில் மாட்டிவிடுவார்கள்.
முடிந்தவரை தவிர்க்க வேண்டியவர்கள், வாழ்க்கைத்துணையாக சேர்க்கக் கூடவேகூடாத நட்சத்திரங்கள் என்றும் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது ஜோதிட சாஸ்திரம். பூசம், அனுஷம், உத்திரட்டாதி. இந்த நட்சத்திரக்காரர்கள் நெருங்கிய உறவாக, வாழ்க்கைத் துணையாக இருந்துவிட்டால், நித்தம்நித்தம் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். வீட்டிற்குப் போவதே நரக வேதனையாக இருக்கும். நண்பர்களாக அமைந்தால்.... என்றாவது ஒருநாள் இந்த நட்சத்திரக்காரர்களால், அவமானத்தைச் சந்திக்கவேண்டியது வரும்.
பரணி நட்சத்திரக்காரர்கள், அடியோடு தவிர்த்தே ஆகவேண்டிய நட்சத்திரம்... அவிட்டம். குறிப்பாக, அவிட்டம் நான்காம் பாதக்காரர்கள்.
நீங்கள் எது சொன்னாலும் மற்றொருவர் எதிர்கருத்தை சொல்கிறாரா? அது நல்ல விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு எதிர் கருத்தை சொல்லுகிறாரா? சரியோ தவறோ நீங்கள் எதைப் பேசினாலும், எதைச் செய்தாலும் எரிச்சல் தரும்படி எதிர்வினையாற்றுகிறாரா? அவர் கண்டிப்பாக அனுஷம் நட்சத்திரக்காரராக இருப்பார்.
இந்த நட்சத்திரக்கார்களிடம் இருந்தும் தள்ளியிருப்பதே நல்லது.
பரணி நட்சத்திரக்காரர்களே... உங்களுக்காக மேலும் சில தகவல்கள்...
தேவதை - துர்கை
அதிதேவதை - எமதர்மன்
மலர் - வெண்தாமரை
தானியம் - மொச்சை
மரம் - நெல்லி
மிருகம் - ஆண் யானை
பறவை - காகம்
எண்கள் - 5, 1, 4
கிழமை - வெள்ளி, ஞாயிறு
சாதகமான திசை - தென்கிழக்கு (அக்னி மூலை)
நோய் - பித்தம் மற்றும் சிறுநீரகப் பிரச்சினை
நிறம்- வெண்மை, இளஞ்சிவப்பு,
தெய்வம் - ஶ்ரீரங்கம் ரங்கநாதர், மற்றும் கௌமாரி
பரணியின் வடிவமாக, குணமாக அடுப்பு, யானை, ஒருங்கிணைத்து புதிய ஒன்றை உருவாக்கும் திறமை என பார்த்தோம், மேலும் நம் உடலில் பிளந்த, விரிந்த அமைப்புகள் பரணியே! (வாய், பெண்ணின் யோனி போன்றவை).
பார்த்தவுடன் ஆச்சரியமாக்கும் கலையம்சம் பொருந்திய கட்டிடங்கள், வீட்டின் வரவேற்பறை, ஸ்டார் ஹோட்டல்களின் வரவேற்பறை, ரிசப்ஷனிஸ்ட்கள் (வரவேற்பாளர்கள்), விமான பணிப்பெண்கள், வழிகாட்டிகள் (கைடுகள்), புதிதாக உருவான நகர் பகுதிகள், அளவாக நீர் சுரக்கும் கிணறுகள் என அனைத்தும் பரணியின் அம்சங்கள்!
மேலும் பரணியின் ஒவ்வொரு நட்சத்திர பாதங்களையும் அந்த பாதங்களின் தன்மைகளையும், குணாதிசயங்களையும் அடுத்து பார்ப்போமா?