விசாகம் நட்சத்திரக்காரர்கள் பற்றிய குணங்கள், சிறப்புகள் பற்றி பார்த்து வருகிறோம். தொடர்ந்து பார்ப்போம்.
விசாக நட்சத்திர அன்பர்கள், ஓயாத உழைப்புக்கு சொந்தக்காரர்கள். தோல்வியிலும் துவளாதவர்கள். எதிரிகளையும் எதிர்ப்புகளையும் தம்மிடம் நெருங்கவிடாதவர்கள் என்றெல்லாம் பார்த்தோம்.
இப்போது ஒவ்வொரு பாதத்திற்குமான தனித்தனியாக பலன்களைப் பார்ப்போம்.
விசாகம் 1ம் பாதம் -
விசாகம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் அபார சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர்கள். அயர்ச்சி, தளர்ச்சி என்பதை அறியாதவர்கள். குறைவான தூக்கம் உடையவர்கள். சதா சர்வகாலமும் அடுத்து என்ன செய்யலாம் என்பதை சிந்தித்துக் கொண்டே இருப்பவர்கள். பின்விளைவுகளைப் பற்றி கவலையேபடாதவர்கள். எப்படிப்பட்ட பிரச்சினை என்றாலும் தைரியத்துடன் எதிர்கொள்பவர்கள். இவர்களிடம், கண்மூடித்தனமான கோபமும் இருக்கும். கனிவான அன்பும் இருக்கும். வாழ்க்கைத்துணையிடம் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக அடங்கிப்போவார்கள்.
அநியாயத்துக்கு பிடிவாதம் கொண்டவர்கள் இவர்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என்பதில் உறுதியாக இருப்பார்கள். யார் அறிவுரை கூறினாலும் அவற்றை அலட்சியப்படுத்துவார்கள். குதர்க்கமான பேச்சைக் கொண்டவர்கள்.
சுயமான சிந்தனை, சுயமாக வளர்தல், குறுகிய காலத்தில் அபார வளர்ச்சியை அடைவது எல்லாமே விசாக நட்சத்திரக்கார்களுக்கே உண்டான தனித்துவங்கள். சொந்தத் தொழில் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். கட்டிட கான்ட்ராக்டர், மண் தொடர்பான தொழில், விவசாயத் தொழில், கட்டுமானப் பொருட்கள் விற்பனை, உணவகம் தொடர்பான தொழில், பாத்திர வியாபாரம், பெரிய ஹோட்டல்களுக்கு சமையலறை வடிவமைப்பாளர். திருமணம் போன்ற சுப காரியங்களின் மொத்த காண்ட்ராக்ட் தொழில். திருமண தகவல் மையம், மருத்துவர். காவல்துறை பணி, ராணுவம், ஆயுதங்கள் கையாளும் பணி போன்ற தொழில்கள் அமையும்.
விசாக நட்சத்திரக்காரர்களுக்கு, சூடான, காரமான உணவு விருப்பமும் இருக்கும். இனிப்பு மற்றும் குளிர்ச்சியான உணவின் மீது விருப்பமும் இருக்கும். ஆரோக்கியத்தில் நரம்பு தளர்ச்சி, எலும்பு தேய்மானம், பல் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்.
விசாகம் 1ம் பாதத்திற்கான இறைவன் - திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்
விருட்சம் - விளா மரம்
வண்ணம் - இளம் சிவப்பு
திசை - கிழக்கு
விசாகம் 2ம் பாதம் -
விசாகம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சொல்வாக்கும் செல்வாக்கும் மிகுந்தவர்கள்.
பணத்தைத் தேடி ஓடாமல், பணம் தன்னை தேடி வரும்படியாக வாழ்வை அமைத்துக்கொள்பவர்கள். கலகலப்பு, மகிழ்ச்சி இவை மட்டுமே இவர்களின் தாரக மந்திரம். பரந்த நட்பு வட்டம், குடும்பப் பாச ஒற்றுமை அதிகம் இருக்கும். நிரந்தர வருமானம் வரும்படியாக சரியாக திட்டமிட்டுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணையிடம் அளவு கடந்த காதல் கொண்டவர்கள். தந்தையைவிட தாயிடம் அதிக பாசம் கொண்டவர்கள்.
ஆனாலும் வலிய போய் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வது இவர்களின் வாடிக்கை. அதேபோல உடல் நலத்திலும் அக்கறை காட்டமாட்டார்கள். அலட்சியமும் அவசர புத்தியும் இருப்பதால் வழக்குகளில் (அலுவலக ஒழுங்கு நடவடிக்கைகளில்) அடிக்கடி சிக்குவார்கள். சாலை போக்குவரத்திலும் அலட்சியமும் கவனக்குறைவும் பல பிரச்சினைகளை உண்டுபண்ணும். அலங்கார தோற்றம், ஆபரணங்ளின் மேல் அளவு கடந்த மோகம், வாசனை திரவியங்களில் அதிக ஆசை முதலானவை விசாகம் 2ல் பாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!
அரசுப் பணி, உயர் பதவிகள், அரசியல் பதவி, நிதி நிர்வாகம், பங்குவர்த்தகம், ஆடை ஆபரணத் தொழில், இனிப்புக் கடை, பேக்கரி, உணவகம், ஆடம்பர வீடுகள் கட்டுமானம், ஆரம்பக் கல்வி நிலையம், குழந்தைகள் காப்பகம், நர்சரி கார்டன், கடல் பொருட்கள் விற்பனை, அயல்நாட்டு ஆடம்பர பொருள் விற்பனை, அழகு நிலையம், மசாஜ் பார்லர் போன்ற தொழில் அமையும்.
விலை உயர்ந்த, சுவையான உணவுகளின் மேல் அதிக விருப்பம் இருக்கும். அளவுக்கு மீறிய உணவு உண்பதும், சதா எதையாவது கொரித்துக்கொண்டே இருப்பதும் இவர்களின் இயல்பு. இதன் காரணமாகவே உடல் பருமன், தொப்பை, வாய் பகுதியில் பிரச்சினை, சொத்தை பல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
விசாகம் 2ம் பாதத்திற்கான இறைவன் - அழகர் மலை கள்ளழகர்
விருட்சம் - சிம்சுபா மரம் ( இந்த மரம் இலங்கையில் மட்டும் இருப்பதாகச் சொல்கிறார்கள், தற்போது இருப்பதாக அறிய முடியவில்லை) அல்லது விளா மரம்
வண்ணம் - நீலம்
திசை - தென் மேற்கு
விசாகம் 3ம் பாதம் -
விசாகம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் கற்பனை வளம் மிகுந்தவர்கள்.
சிறந்த படிப்பாளிகள். படைப்புத் திறன் உள்ளவர்கள். பன்மொழி வித்தகர்கள். சகோதரப் பாசம் மிக்கவர்கள். தாயன்பு அதிகம் இருந்தாலும் தந்தையின் அன்பை அதிகம் பெற்றவர்கள். உடை நேர்த்தி, பேச்சில் கண்ணியம், கேள்வி ஞானம், இசையார்வம், சாதுர்யமான பேச்சு, கணிதத் திறமை, மருத்துவம், ஜோதிடம் போன்றவற்றில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
பூர்வீகச் சொத்து சிறிதாவது இருக்கும். பூர்வீகத்தை விட்டு வெளியூரில் வசிக்க வேண்டியது வரும். எதிர்பாலினத்தவரை எளிதில் வசப்படுத்துவதில் சாமர்த்தியசாலிகள். இதன் காரணமாகவே பலவித பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதும் வரும்.
பேச்சாலேயே பலரையும் கவர்ந்துவிடுவார்கள். அளவான நட்பு வட்டம் இருக்கும். மற்றவர்களால் முடியாத காரியத்தை இவர்கள் எளிதாக முடித்து காண்பிப்பார்கள். பொதுவாகவே இவர்கள் சொகுசான வேலையில் தான் இருப்பார்கள். அதாவது உடல் உழைப்பை விட மூளைக்கு வேலைதரும் பணிகளில்தான் இருப்பார்கள்.
தகவல் தொழில் நுட்பம், பத்திரிகை, ஊடகத்துறைகளில் சாதிப்பவர்கள், திரைத்துறை, கதை கவிதை எழுதுதல், ஆசிரியர், வழக்கறிஞர், பயணம் தொடர்பான தொழில், கட்டுரையாளர், ஓவியம், கமிஷன் ஏஜென்ட், நில வியாபாரம், தரகு தொழில், மளிகைக் கடை, புதுமையான பொருட்கள், நூதனப் பொருட்கள் விற்பனை, இசைக் கருவிகள் தொடர்பான தொழில், இது போன்ற தொழில் மற்றும் வேலைகள் அமையும்.
சுவையான, புதுமையான உணவுகளைத் தேடி உண்பவர்கள். இவர்களுக்கு காது மூக்கு தொண்டையில் தான் அதிகப்படியான பிரச்சினைகள் வரும். காது மந்தம், காது வலி, சைனஸ் பிரச்சினை, டான்சில்ஸ், பெண்மை கலந்த குரல், வழுக்கைத்தலை போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
விசாகம் 3ம் பாதத்திற்கான இறைவன் - மதுரை மீனாட்சி மற்றும் திருவள்ளூர் வீரராகவ பெருமாள்.
விருட்சம் - பூவரசம் மரம்
வண்ணம் - ராமர் பச்சை
திசை - மேற்கு
விசாகம் 4ம் பாதம் -
விசாகம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் கற்பனையில் கோட்டை கட்டி அதில் ராஜாவாக வாழ்பவர்கள்.
தான் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானித்து அதன்படியே வாழ்பவர்கள். இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு மனை வாகனம் என வளமான வாழ்வு அமையும். தாயன்பு அதிகம் கிடைக்கும். தாயார் வழி சொத்துகள் கிடைக்கும். ஒன்றை விரும்பியபோதே எளிதில் உடனே கிடைத்துவிடும் பாக்கியசாலிகள். இப்படி எதுவும் எளிதாக கிடைப்பதாலும், அதிக மெனக்கெடல் இல்லாததாலும், அடுத்தவர் கஷ்டம் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். தன் காரியம் நிறைவேறுவதில் மட்டுமே குறியாக இருப்பார்கள்.
நட்பு வட்டம் இருக்கும். ஆனால் எந்த நட்பும் அதிக நாள் நீடிக்காது! காரணம்... இவர்களின் செயல்பாடுகள் காரணமாக விலகிச் சென்றுவிடுவார்கள். சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும் எளிதில் திருப்தி அடையமாட்டார்கள். இதைவிட சிறப்பாக வேண்டும் என்ற அற்ப ஆசை இருந்து கொண்டே இருக்கும். எவர் உதவி கேட்டாலும் தயங்காமல் செய்து கொடுப்பார்கள். இவர்கள் துவக்கி வைக்கும் எந்தக் காரியமும் ஆல் போல் தழைத்து வளரும். ஆனால் செய்த உதவியை சொல்லிக் காட்டி அல்ப சந்தோசம் அடைவார்கள்.
பயணம் தொடர்பான தொழில், விமானப் பயண ஏற்பாட்டாளர், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் தொழில். காய்கறி வியாபாரம், உணவகம், கேட்டரிங் சர்வீஸ், சமையல் கலையில் நிபுணர்களாக இருப்பார்கள், சமையல் கலையில் பிரபலமாக இருப்பார்கள். இவர்களின் கை பக்குவத்திற்கு தனியாக ரசிகர் கூட்டமே இருக்கும். தனியார் வேலை வாய்ப்பு மையம், ஓட்டுநர், நடத்துநர், டிக்கெட் பரிசோதகர், தரகு கமிஷன், பூமி தொடர்பான தொழில், கட்டுமானப் பொருள் தொழில். அரசியல் பதவி. கட்சி பொறுப்பு போன்ற பணிகள் இருக்கும்.
பெண்கள் நல மருத்துவர், குழந்தைகள் மருத்துவர், மயக்க மருந்து நிபுணர், திரைத்துறை, கதை கவிதை எழுத்து என கற்பனை வித்தகர்கள். பெண்களுக்கான ஆடை அணிகலன் விற்பனை, அழகு சாதனப் பொருட்கள் விற்பனை, அக்குபஞ்சர் போன்ற மருத்துவம் இதுபோன்ற தொழில் அமையும்.
உணவு விருப்பமாக இன்னதுதான் வேண்டும் என்று எந்த தனிப்பட்ட விருப்பமும் இருக்காது. எந்த உணவையும் விரும்பி உண்பார்கள். தீராத சளி இருமல், நெஞ்சக நோய், உணவு குழாய் பாதிப்பு, ஆஸ்துமா, போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
விசாகம் 4ம் பாதத்திற்கான இறைவன் - சமயபுரம் மாரியம்மன்
விருட்சம் - தூங்குமூஞ்சி மரம் (பேர் தான் இப்படி இருக்கும். மிக செழிப்பான மரம்)
வண்ணம் - பிங்க் என்னும் இளம் சிவப்பு
திசை - வடக்கு
பொதுவாக விசாகத்தில் பிறந்தவர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், மகான்கள் போன்றவர்களுக்கு தன்னலம் இல்லாத சேவை செய்வது சிறந்த பலனைத் தரும்.
அடுத்த பதிவில் “அனுஷம்”நட்சத்திரத்தைப் பார்க்கலாம். பரிபூரணமான, மகாலட்சுமி அருளாசி பெற்ற, வாயு பகவான் அவதரித்த நட்சத்திரம் இது.
அனுஷம் நட்சத்திரத்தை அடுத்து பார்ப்போம்.