27 நட்சத்திரங்கள் குறித்து எழுதி வரும் தொடரில், இது 50வது பதிவு. உங்களின் ஆதரவால்தான் இது சாத்தியம் என்பதை மகிழ்வுடனும் நெகிழ்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில், என்னுடைய ஜோதிட குரு யோகராம்சங்கர் அவர்களையும், வாராதுவந்த மாமணியாய் எனக்கு கிடைத்த ஞானகுரு எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயா அவர்களையும் மனதால் வணங்கி மகிழ்கிறேன்.
50வது பதிவுக்குள் நுழைவோமா?
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் அனுஷம். இது, மகாலட்சுமியின் நட்சத்திரம். இதை வாசிக்கும் அனைவருக்கும் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க அம்பிகையைப் பிரார்த்தனை செய்கிறேன்.
அனுஷம் நட்சத்திரம், மகாலக்ஷ்மியின் நட்சத்திரம்.
அதுமட்டுமா? சனி பகவானின் நட்சத்திரமும் அனுஷம் தான். நட்சத்திர வரிசையில் 17வது நட்சத்திரம். இந்த நட்சத்திரம் இருக்கும் ராசி விருச்சிகம்.
இந்த நட்சத்திரத்தில்தான் வாயுபகவான் அவதரித்தார். மகாலட்சுமி தாயார் அமர்ந்திருக்கும் தாமரை பிறந்ததும் அனுஷத்தில்தான்.
அனுஷ நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும்?
பொதுவாக, விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பிடிவாத குணம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். என்பது ஜோதிட சாஸ்திரத்தின் பொதுவிதி. ஆனால் இந்த அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பொருந்தாது.
இன்னும் சொல்லப்போனால் இவர்கள் கையில் ஒருரூபாய் வாங்கி தொழில் அல்லது வியாபாரம் தொடங்கினால் கோடீஸ்வரன் ஆகிவிடுவார்கள் என்பது சர்வ நிச்சயம். அவ்வளவு அதிர்ஷ்டகரமான கைகளுக்குச் சொந்தக்காரர்கள் அனுஷம் நட்சத்திரக்காரர்கள். லக்ஷ்மி அம்சம் என்றால் சும்மாவா? தொட்டதெல்லாம் துலங்கும். கூரையும் மாளிகையாகும். மாற்று உடைகூட இல்லாத கந்தல் அணிந்தவர்களையும் கோடீஸ்வரனாக (உண்மையில் நடந்திருக்கிறது, என் நண்பருக்கு) மாற்றும் வல்லமை கொண்டது இந்த அனுஷம்.
முன்பு சித்திரை நட்சத்திரம் திருமணத் தாலியை குறிக்கும் என்றும், ஆதியில் திருமணத் தாலி பனையோலையில் இருந்தது என்றும் பார்த்தோம் நினைவிருக்கிறதுதானே. அந்த பனைமரம் மற்றும் பனையோலை இந்த அனுஷ நட்சத்திரத்தின் வடிவமே.
சரி, சித்திரை நட்சத்திரத்திற்கும் அனுஷத்திற்கும் என்ன தொடர்பு?
சித்திரை நட்சத்திரம் இடம்பெற்றிருப்பது 7ம் இடம். அதாவது திருமண ஸ்தானம். இந்த அனுஷம் இடம்பெற்றிருப்பது விருச்சிகம் எனும் 8ம் இடம் எனும் மாங்கல்ய ஸ்தானம். இப்போது புரிகிறதல்லவா! 7ம் இடத்தில் கட்டிய தாலி நிலைத்து இருப்பதை உறுதி செய்வது 8ம் இடம்தான்.
அனுஷம் நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு அச்சு அசலாக பனைமரம் போன்றே இருக்கும். பனைமரம் வறண்ட நிலத்தில் செழிப்பாக வளரக்கூடியது, சிறிதளவு மழையையும் தன்னுள் ஈர்த்து நீண்ட வருடம் பலன் கொடுக்கக்கூடியது, நீர்நிலைகளின் கரைப் பகுதியில் பனையை வளர்த்தால் அந்த நீர்நிலை எப்போதும் வற்றாத நீர்நிலையாக இருக்கும் என்பது நாம் அறிந்த உண்மை.
இதுபோல அனுஷம் நட்சத்திரக்காரர்கள் கிடைத்த எந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தும் திறமை கொண்டவர்கள். அதுபோல கிடைத்த எதையும் வீணாக்காமல் காப்பாற்றும் திறமையும் மிக்கவர்கள். சிறிய விஷயத்தையும் சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள். அதில் இழப்புகள் ஏற்பட்டாலும் கவலைப்படமாட்டார்கள்.
அணியும் உடையில் எந்த அக்கறையும் காட்டமாட்டார்கள். எந்த இடத்தில் எந்த உடை அணிய வேண்டும் என்று கூட அறிந்திருக்க மாட்டார்கள். அது கசங்கிய உடையாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். உணவில்கூட ருசியான உணவுதான் வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள். இவர்களைப் பொறுத்தவரை வயிறு நிறைய வேண்டும் அவ்வளவுதான். இது ஏதோ இவர்களை சிறுமைப்படுத்துவது போல் இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே, எளிமையான... ருசிக்கு முக்கியத்துவம் தராதவர்கள். ஞானிகள், மகான்கள் போன்ற எதிர்பார்ப்பு இல்லாத ஞான நிலை கொண்டு இருப்பவர்கள், அனுஷ நட்சத்திரக்காரர்கள்.
இவர்களுக்கு அடிவயிற்றில் ஏதாவதொரு தழும்பு இருக்கும். காயத்தழும்பு அல்லது குடல்வால் அறுவை சிகிச்சை தொடர்பான தழும்பு அல்லது மச்சம் போன்று ஏதேனும் தழும்பு இருக்கும்.
ஒரு சோகம்...
அனுஷ நட்சத்திரக்காரர்கள், தாயின் அன்புக்கு ஏங்குபவர்கள். ஆனால் தாயின் அன்பு இவர்களுக்கு கிடைக்காது. இவர்களில் பெரும்பாலோர் தாயைப் பிரிந்து இருப்பார்கள். அதிலும் சிறு வயதிலேயே பாட்டி வீட்டில் வளர்தல், அல்லது விடுதியில் தங்கி படிப்பது போன்றவை இருக்கும். சகோதரர் இருப்பின் இவரை விடவும் சகோதரருக்கே தாயார் அதிக முக்கியத்துவம் தருவார்.
அனுஷ நட்சத்திரக்காரர்கள், உலகம் சுற்றுபவர்கள். கல்வி நிமித்தமாக, பணியின் காரணமாக என சொந்த ஊரை விட்டு அயலூர், அயல்நாடு என வாழ்பவர்களாக இருப்பார்கள். உணர்ச்சிவசப்படுவதிலும், கோபப்படுவதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே. ஆனால் வந்த கோபம் வந்த வேகத்திலேயே காணாமல் போகும். இவர்களின் பிரச்சினையே சிறிய விஷயத்திற்கும் (Guilty யாக) குற்ற உணர்வோடு இருப்பதுதான். அங்கலாய்ப்பு என்னும் புலம்பல் அதிகமிருக்கும். இதுவே இவர்களுக்கு பாதிப்பையும் தரும். அதாவது மன உளைச்சல், பிரச்சினை, மன உறுத்தல் போன்ற பாதிப்புகள் இருக்கும்.
இன்னும் ஒரு சிலருக்கு இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக்கொள்ளும் மன ரீதியான பிரச்சினைகள் இருக்கும். அமாவாசை, பௌர்ணமி காலங்களில் மிகுந்த பரபரப்பாக, பதட்டமாக இருப்பார்கள். இதை இவர்கள் உணரமாட்டார்கள், இவர்களைச் சுற்றி உள்ளவர்கள் நன்கறிந்து வைத்திருப்பார்கள்.
இறை பக்தியில் இவர்களை மிஞ்சுவதற்கு எவரும் கிடையாது. மாந்திரீக தாந்திரீக நாட்டம் அதிகமிருக்கும். கடவுள் இருக்கிறார் என்பதை எவ்வளவு நம்புகிறார்களோ அதே அளவுக்கு தீய சக்தியும் இருக்கிறது என்பதில் அதிகம் நம்பிக்கை உடையவர்கள்.
தானதர்மங்கள் செய்வதில் அதிகம் ஆர்வம் உடையவர்கள். தனக்கு இல்லாவிட்டாலும் அடுத்தவருக்கு தருவதில் மகிழ்ச்சி கொள்பவர்கள். தர்மம் செய்ய எந்த எல்லைக்கும் செல்பவர்கள். வெள்ளை மனதுக்கு சொந்தக்காரர்கள். உதவி செய்வதிலும் உதவியைக் கேட்டு பெறுவதிலும் சிறிதும் தயக்கம் காட்டாதவர்கள்.
இன்னும் இருக்கிறது அனுஷத்தின் மகிமை.
அனுஷத்தின் மகிமை என்று சொல்லும்போது உங்களுக்கும் நிச்சயம் தோன்றியிருக்கும்.
ஆமாம்! நடமாடும் தெய்வம் காஞ்சி மகான். மகா பெரியவா சுவாமிகள் அவதரித்தது இந்த பெருமைமிகு அனுஷம் நட்சத்திரத்தில்தான்..!
அடுத்த பதிவில் இன்னும் பல தகவல்களை பார்ப்போம்.