பலன்: வறுமை ஒழியும்
அய்யன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செய்யும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே?
பொருள்:
சிவபெருமான், அளந்த 2 நாழி நெல்லைக்கொண்டு, அண்டமெல்லாம் 32 அறங்களை செய்தவள் அன்னை.
காஞ்சி ஏகாம்பரநாதர் நெல்லை அளந்ததாகவும், அதைக்கொண்டு காமாக்ஷி அறங்களை செய்ததாகவும் புராணம் கூறுகிறது. அதனாலேயே காஞ்சிபுரம் பஞ்ச பூத ஸ்தலங்களுள் ப்ரிதிவி ஸ்தலம், நிலத்திற்கு உரிய க்ஷேத்ரம் என கருதப்படுகிறது.
இதேபோல், அய்யன், அடியவனின் நிலத்தை வேலி இட்டு காத்த இடம் இன்று திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது. அம்மையும், திருவையாற்றில் தர்மசம்வர்தனி, அறம்வளர்த்தநாயகி என்று அழைக்கப்படுகிறாள்.
இவ்வாறு அறம் செய்யும் அன்னையை போற்றி பாட தனக்கு தமிழினை கொடுத்தமைக்கு பட்டர் நன்றி செலுத்துகிறார்.
மேலும், நிலத்தை ஆளும் மன்னர்களை மகிழ்விக்கவும் (பொய்யும், மெய்யும் கலந்து போற்றும் நிலை) அந்த தமிழ் பயன்படுகிறதே என்று வருத்தமும் படுகிறார். இதுவும் அன்னையின் திருவிளையாடலே. இதுவா உனது மெய்யருள்? என்று கேட்கிறார்.
பாடல் (ராகம்-சங்கராபரணம், தாளம் -- விருத்தம்--) கேட்க