ராகுல் காந்தி கையைப் பிடித்துத் தள்ளினார்: கர்ப்பிணி செய்தியாளர் குற்றச்சாட்டு


 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளியதாக மூன்று மாத கர்ப்பிணியான செய்தியாளர் ரிச்சா பராஷர் குற்றம்சாட்டியுள்ளார்.


அக்டோபர் 12-ம் தேதி, டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தை நோக்கி இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேரணியாகச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.


ராகுல் காந்தியிடம் கருத்துக் கேட்பதற்காக மைக்கை நீட்டியபோது, அதை அகற்றுமாறு அவர் சைகை செய்ததாக ரிச்சா தெரிவித்துள்ளார். அதன்படி மைக்கை அகற்றியதாகவும், மற்ற செய்தியாளர்கள் தொடர்ந்து மைக்குகளை நீட்டியதால் தானும் மீண்டும் மைக்கை நீட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.


அப்போது ராகுல் காந்தி தனது கையைப் பிடித்து பலமாக இழுத்ததாகவும், இதனால் தான் கீழே விழுந்து முழங்கால்களிலும் வயிற்றிலும் காயமடைந்ததாகவும் ரிச்சா குற்றம்சாட்டியுள்ளார். தனது ஒளிப்பதிவாளரையும் ராகுல் தள்ளியதாகவும், அவர் தன் மீது விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் மேலும் நான்கு பேர் தன் மீது விழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ரிச்சா டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் சந்தித்தனர்.


இதற்கிடையே, ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறுத்துள்ளது. இது பாஜக உருவாக்கிய பிரச்சாரக் கதை என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான காணொளிகளில் ராகுல் காந்தி கர்ப்பிணி செய்தியாளரைத் தள்ளியதற்கான காட்சி இல்லை என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவும் காங்கிரஸும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன.

Previous Next

نموذج الاتصال