சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம்


 தமிழக சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை டிஜிபியாகப் பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைமை கண்காணிப்பு அதிகாரியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இதற்கான உத்தரவை தமிழக அரசு அக்டோபர் 29ஆம் தேதி பிறப்பித்தது. இதையடுத்து, சென்னை அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாகப் பணியாற்றி வந்த கே. சங்கர், சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி துணைச் சிறையில் அக்டோபர் 26ஆம் தேதி இரவு 17 விசாரணைக் கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, காவல்துறையினர் 17 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். தப்பியோடிய 17 பேரும் 43 மணி நேரத்துக்குள் மீண்டும் பிடிக்கப்பட்டனர்.


இதற்கு முன்பு அக்டோபர் 20ஆம் தேதி சென்னை புழல் மத்திய சிறையிலிருந்தும் இரண்டு கைதிகள் தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்தது. பின்னர் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.


தேனி சிறையில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாக, அங்கு பணியாற்றிய ஒன்பது சிறைக் காவலர்களை இடைநீக்கம் செய்து சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார்.


தொடர்ச்சியாக நிகழ்ந்த சிறைக் கைதிகள் தப்பியோடிய சம்பவங்களைத் தொடர்ந்து, சிறைத்துறையின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் இந்தப் பணியிட மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال