டெல்லி–சென்னை விமானத்தில் தீப்பற்றியதால் பரபரப்பு: ஹைதராபாத்தில் அவசரத் தரையிறக்கம்


 டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பயணிகள் விமானத்தின் உட்புற லக்கேஜ் கேபினில் தீப்பற்றியதால், விமானம் ஹைதராபாத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 180 பேரும் பெரும் ஆபத்திலிருந்து தப்பினர்.


டெல்லியில் இருந்து நேற்று பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானத்தில் 174 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் இருந்தனர்.


பிற்பகல் 3 மணியளவில், சுமார் 36,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, பயணிகளின் உடைமைகளை வைக்கும் லக்கேஜ் கேபின் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதைக் கவனித்த பயணிகளும் விமானப் பணிப்பெண்களும் உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.


அப்போது விமானம் ஹைதராபாத் அருகே இருந்ததால், விமானி அங்குள்ள விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அவசரத் தரையிறக்கத்துக்கு அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும் விமானம் ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.


இதற்கிடையில், லக்கேஜ் கேபின் பகுதியில் தீ பரவத் தொடங்கியது. விமானப் பணியாளர்கள் அவசரகாலத் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயன்றனர். விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத் தீயணைப்புப் படையினர் உள்ளே சென்று தீயை முழுமையாக அணைத்தனர்.


விமானி உரிய நேரத்தில் அவசரத் தரையிறக்க முடிவெடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


பயணி ஒருவர் தனது செல்போனை சார்ஜ் செய்யப் பயன்படுத்தும் பவர் பேங்க்கை லக்கேஜுக்குள் வைத்து கேபினில் வைத்திருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பற்றியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous Next

نموذج الاتصال