நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பர்லியாறு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து மீது மண் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார். படுகாயமடைந்த நடத்துநர் கேசவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற இந்த அரசுப் பேருந்தில், பயணம் தொடங்கியபோது 60-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். குன்னூர் அருகே மழை அதிகரித்ததுடன் பேருந்தின் டயரும் பஞ்சரானதால் பல பயணிகள் கீழே இறங்கினர்.
டயர் சரிசெய்யப்பட்ட பின்னர் பேருந்து மீண்டும் புறப்பட்டது. அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் சேர்த்து 8 பேர் மட்டுமே பேருந்தில் இருந்தனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பர்லியாறு அருகே மலைப்பாதையில் இரண்டு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால், தொடர்ந்து பேருந்தை இயக்குவது ஆபத்தானது எனக் கருதிய ஓட்டுநர் வாகனத்தைப் பின்னோக்கி நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் நிறுத்த முயன்றார். அதற்குள் மழைநீர் பெருக்கெடுத்து மண்ணுடன் சரிந்து பேருந்தின் மீது விழுந்தது.
மண்ணில் பல மணி நேரம் சிக்கியிருந்த நடத்துநர் கேசவனை மீட்புக் குழுவினர் மீட்டனர். அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, ஊட்டிக்கு சுற்றுலா வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 266 பேர் நிலச்சரிவுப் பகுதியில் சிக்கினர். அவர்களில் ஒரு பள்ளியைச் சேர்ந்த 136 மாணவர்கள், 17 ஆசிரியர்கள் என 153 பேரும், மற்றொரு பள்ளியைச் சேர்ந்த 105 மாணவர்கள், 8 ஆசிரியர்கள் என 113 பேரும் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் மேட்டுப்பாளையம் மற்றும் கல்லாறு பகுதிகளில் உள்ள மண்டபங்கள், பள்ளி வளாகங்களில் தங்க வைக்கப்பட்டனர். கனமழையால் பாதிக்கப்பட்ட மலைப்பாதைகளில் சீரமைப்புப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
