நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு: நார்வே மீது ட்ரம்ப் கடும் விமர்சனம்


 வாஷிங்டன்: 2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்க நீதிபதியும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.


போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக நவநீதம் பிள்ளைக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 9-ம் தேதி நார்வே நோபல் குழு, ஆஸ்லோவில் விருது பெறுபவரை அறிவித்தது.


அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நவநீதம் பிள்ளையைப் பாராட்டிக் கைதட்டினர். இதற்குப் பதிலளித்த அவர், மேலும் சிறிது நேரம் கைதட்டினால் இந்தப் பரிசை ட்ரம்புடன் பகிர்ந்துகொள்வதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.


கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனது நோபல் தங்கப் பதக்கத்தை ட்ரம்புக்கு வழங்கிய சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் அவரது கருத்து அமைந்ததாகக் கருதப்படுகிறது.


இதற்கிடையே, நியூயார்க்கில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், நவநீதம் பிள்ளையைப் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை என்று கூறினார். அமெரிக்காவுக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


நவநீதம் பிள்ளையைத் தேர்வு செய்தது நார்வே நாட்டுக்கு அழியாத களங்கம் என்று விமர்சித்த ட்ரம்ப், சில தீவிர சித்தாந்தவாதிகளால் இந்த விருதின் மதிப்பு குறைந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.


2025 ஜனவரியில் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தி வந்துள்ளார்.


ஈரானுக்கு எதிரான போர், கிரீன்லாந்து உள்ளிட்ட பகுதிகளை இணைப்பது தொடர்பான அவரது விருப்பம், குடியேறியவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச அமைப்புகள், ஊடகங்கள் மீதான விமர்சனங்கள் ஆகியவை அவரது பரிசுத் தகுதி குறித்து கேள்விகளை எழுப்பியதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

Previous Next

نموذج الاتصال