தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாகச் சென்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதையடுத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள உணவகத்தில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் பேருந்துகளில் ஜந்தர் மந்தரை நோக்கிப் புறப்பட்டனர்.
ஜந்தர் மந்தருக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்ததால், எம்.பி.க்கள் சென்ற பேருந்துகள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.
போராட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஜந்தர் மந்தரில்தான் போராட்டம் நடத்துவோம் என ராகுல் காந்தி தெரிவித்தார். இதையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட சில தலைவர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டனர்.
பின்னர் அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் பலமுறை கேட்டுக்கொண்டபோதும் போராட்டத்தை கைவிட மறுத்ததால், ராகுல், பிரியங்கா உள்ளிட்ட சில எம்.பி.க்களை போலீஸார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனால் டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டம் மற்றும் கைது நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.
