தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் சமூகநீதி கணக்காய்வு ஆணையம் அமைக்க முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசின் மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது. வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர்கள் அருண்ராஜ், டி.கே. பிரபு ஆகிய இருவரைத் தவிர மற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகள், முஸ்லிம் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, தாழம்பூர் புறம்போக்கு நிலப் பிரச்சினை மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதில், தமிழகத்தில் புதிதாக எட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி வழங்கவும், சமூகநீதி கணக்கெடுப்புக்காக ஆணையம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய தலைமைச் செயலகம் மற்றும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மத்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பின்னர், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் சமூகநீதி கணக்காய்வு ஆணையம் அமைக்கப்படும் என்றார்.
இந்த ஆணையத்தின் மூலம் அடுத்த ஆண்டு தமிழகம் முழுவதும் சாதிவாரி மற்றும் சமூகப் பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) சான்றிதழ் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
