குடியரசுத் தலைவரை அரசியல் விவாதத்துக்குள் இழுப்பதா? ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம்


 புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அரசியல் விவாதத்துக்குள் இழுப்பதாகக் கூறி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.


ராகுல் காந்தி தலைமையில் இண்டியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 10 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்தது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அந்தக் குழு சமர்ப்பித்தது.


இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு தொடர்பான தங்களது குற்றச்சாட்டுகளை குடியரசுத் தலைவர் மறுக்காதது ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்தார்.


இதற்குப் பதிலளித்த சாம்பிட் பத்ரா, ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளிப்பது என்பது வழக்கமான நடைமுறை என்றும், அந்தச் சந்திப்பை ராகுல் காந்தி அரசியல் நாடகமாக மாற்றிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


மேலும், தேர்தல் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் சுமார் ஓராண்டாகக் குற்றம்சாட்டி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை குடியரசுத் தலைவரிடம் ஏன் சமர்ப்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.


ஆதாரங்களைப் பின்னர் அளிக்கத் திட்டமிட்டிருந்தால், அவை இல்லாமல் குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் சென்றது ஏன் என்றும் சாம்பிட் பத்ரா கேள்வி எழுப்பினார்.


நாட்டின் உயரிய அரசியலமைப்புப் பதவியை வகிக்கும் அளவுக்கு ராகுல் காந்தி பொறுப்புடன் செயல்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

Previous Next

نموذج الاتصال