சென்னை: தமிழகம் முழுவதும் தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான காலி இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யாததால், ரயில்வே தலைமைப் பொறியாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகளை முந்தைய முறை விசாரித்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீட்டு கனிம நிதியை இரண்டு வாரங்களுக்குள் விடுவிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், நீதிபதிகள் என். சதீஷ்குமார், ஜி.கே. முத்துகுமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் கே. சுரேந்திரன், மாவட்ட வாரியாக சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட விவரங்கள் குறித்த தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலரின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், நீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டக் குழுக்களின் ஒப்புதலைப் பெற்று, அந்தந்த மாவட்டங்களின் கனிம நிதியைப் பயன்படுத்தி மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், மரங்கள் அகற்றப்படும் பணிகள் தொடர்பான தரவுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவதாகவும், பணிகளில் தாமதம் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, ரயில்வேக்குச் சொந்தமான காலி இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யாத ரயில்வே நிர்வாகத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், சில மாவட்டங்களில் மரங்களை அகற்றியது தொடர்பான புள்ளிவிவரங்களில் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
