தமிழகத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், 2026–2027-ம் கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்துவதற்கு தமிழக அரசு ரூ.8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான அரசாணையைப் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் ஜெ. இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகளை நடத்த அரசு முடிவு செய்தது. இதன்படி, 2022–2023-ம் ஆண்டில் மாவட்டங்கள் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன.
அந்த வகைப்பாட்டின்படி, ஏ பிரிவு மாவட்டங்களுக்கு ரூ.17.50 லட்சமும், பி பிரிவு மாவட்டங்களுக்கு ரூ.14 லட்சமும், சி பிரிவு மாவட்டங்களுக்கு ரூ.12 லட்சமும் ஒதுக்கப்பட்டன. இதன் மூலம் மொத்தம் ரூ.4.96 கோடி செலவில் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, 2023–2024 மற்றும் 2024–2025-ம் கல்வியாண்டுகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், நடப்பு 2026–2027-ம் கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் புத்தகக் காட்சிகளை நடத்துவதற்காக ரூ.8.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியைப் பொது நூலக இயக்குநர் மாவட்டக் கருவூலங்கள் மூலம் முன்பணமாகப் பெற்று, மாவட்டங்களில் புத்தகக் காட்சிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
