தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை


 சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடி கல்வி நிதியை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.


சென்னை ஐஐடி வளாகத்தில் மத்திய அரசின் சார்பில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் பேசினார்.


மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது, அதன் பலன்கள் மக்களின் வாழ்க்கையில் நேரடியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தமிழகத்தின் வளர்ச்சி சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களையும் சென்றடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


மேற்கு மற்றும் தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் கோரினார். மேலும், தமிழகத்தின் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரை மாநிலங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


சென்னை–கன்னியாகுமரி மற்றும் சென்னை–கோவை இடையே அதிவேக ரயில் வழித்தடங்களை அமைக்கவும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


செங்கல்பட்டு–திருச்சி ஜிஎஸ்டி சாலை, தேசிய நெடுஞ்சாலை 81-ன் குறிப்பிட்ட பகுதிகள், கரூர்–கோவை சாலை ஆகியவற்றை ஆறு வழிச்சாலைகளாக மாற்றவும், தேசிய நெடுஞ்சாலை 87-ல் மாதவரம்–சோழவரம் இடையே உயர்மட்டப் பாலம் அமைக்கவும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.


கோதாவரி–காவிரி இணைப்புத் திட்டத்தை தேசியத் திட்டமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் தமிழை முதன்மை மொழியாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


மேலும், சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடி கல்வி நிதியை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Previous Next

نموذج الاتصال