சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி முதியவரிடம் ரூ.46.50 லட்சம் மோசடி செய்ததாக கோவையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்குடியைச் சேர்ந்த முதியவரின் செல்போனைத் தொடர்புகொண்ட சிலர், தாங்கள் பெங்களூரு காவல்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவரது ஆதார் அட்டை தவறான செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக மிரட்டி உள்ளனர்.
மேலும், பணம் செலுத்தினால் வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதை உண்மை என நம்பிய முதியவர், அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரூ.46.50 லட்சத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் தான் மோசடிக்கு உள்ளானதை உணர்ந்த முதியவர், சிவகங்கை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஹிதேஷ் சஞ்ஷெட்டி (33), சையத் ரஹ்மான் (44) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
டிஜிட்டல் கைது என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். காவல்துறை அல்லது அரசு அதிகாரிகள் எனக் கூறி தொலைபேசியில் மிரட்டுபவர்களிடம் பணம் அனுப்பாமல், சம்பந்தப்பட்ட காவல்துறையிடம் நேரடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
