அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களை ஏமாற்றிய 2 இடைத்தரகர்கள் கைது


 திருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி பக்தர்களிடம் பணம் பெற்றதாக 2 இடைத்தரகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி சிலர் பக்தர்களிடம் பணம் பெற்று ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்துள்ளன.


இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் கோயிலுக்கு வந்துள்ளனர். அவர்களிடம் 2 பேர் விரைவு தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பணம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணம் பெற்ற பின்னர் பக்தர்களை விரைவு தரிசனத்துக்கு அழைத்துச் செல்லாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இடைத்தரகர்களாக செயல்பட்டு பக்தர்களிடம் பணம் பெற்றதாக திருவண்ணாமலை வஉசி நகரைச் சேர்ந்த விஜயராஜ் மற்றும் சிவநாதன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.


இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களை குறிவைத்து விரைவு தரிசனம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்வதாகக் கூறி பணம் வசூலிக்கும் இடைத்தரகர்கள் குறித்து புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Next

نموذج الاتصال