ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூடுதலாக 25% ஊதிய உயர்வு இல்லை: கூட்டுறவுத் துறை விளக்கம்


 தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூடுதலாக 25 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கு விதிகளில் இடமில்லை என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், ஊழியர்களின் பணிச்சுமை மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுவதில்லை எனக் கூறி அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் ஊழியர்கள்கூட மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக ஊதியம் பெறுவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, ஊதிய உயர்வு வழங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்து, தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஊதிய உயர்வை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டும் என்றும், கூடுதலாக 25 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.


இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் க. தர்பக ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.


அதில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு உரிய அளவில் ஊதிய உயர்வு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு அகவிலைப்படியும் அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதிய உயர்வு வழங்க முடியும் என்றும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்குவதற்கும் விதிகளில் இடமில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதனால், கூடுதலாக 25 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Previous Next

نموذج الاتصال