ரியாத் விமான நிலையம் மீதான ஹூதி தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு, 300 பேர் காயம்; 11 இந்தியர்கள் பாதிப்பு


 ரியாத்: சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 11 பேர் இந்தியர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


காயமடைந்த இந்தியர்களின் உடல்நிலை குறித்து ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், சவுதி அரேபிய அதிகாரிகள் மற்றும் அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்புகொண்டு வருகிறது.


இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.


மேலும், சவுதி அரேபியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இந்தியா அந்நாட்டுக்கு ஆதரவாக நிற்கும் எனத் தெரிவித்துள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.


கடந்த ஒரு வாரத்தில் ரியாத் விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும். சவுதி அரேபியா தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், மேலும் கடுமையான தாக்குதல்கள் தொடரும் என்று ஹவுதி அமைப்பு எச்சரித்துள்ளது.


மெக்கா மற்றும் மதினா விமான நிலையங்களைத் தவிர்த்து, சவுதி அரேபியாவின் பிற விமான நிலையங்களையும் வான்வெளியையும் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பயணிகளுக்கும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.


தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விமான நிலையச் செயல்பாடுகளை சவுதி அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரியாத்தில் உள்ள பள்ளிகளுக்கு இணையவழிக் கல்வியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال