அமெரிக்காவின் FBI மோஸ்ட் வாண்டட் மோசடியாளர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளி நபர்


 வாஷிங்டன்: அமெரிக்க அரசின் நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சித் சிங் பேடியை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI தனது ‘மோஸ்ட் வாண்டட் ஃபிராட்ஸ்டர்ஸ்’ பட்டியலில் சேர்த்துள்ளது.


2024-ம் ஆண்டு மார்ச் முதல் 2025-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அரசுக்கு குறைந்தது 6 லட்சம் டாலர் இழப்பு ஏற்படுத்திய மோசடி திட்டத்தில் பேடி ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் டகோமா நகரில் ‘ஏசியன் கிராசரி ஸ்டோர்’ என்ற சிறிய மளிகைக் கடையை பேடி நடத்தி வந்ததாக FBI தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் SNAP உணவு உதவித் திட்டத்தின் பயனாளிகள் தங்களது EBT அட்டைகளைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, அவர்களின் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் வழங்கியதாக பேடி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் கிடைத்த தொகையில் பாதியை அவர் வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.


வயர் மோசடி மற்றும் SNAP நலத்திட்ட மோசடி வழக்குகளில் பேடி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கைது செய்யப்படாமல் நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், பாஸ்போர்ட்டை ஒப்படைத்து வாஷிங்டன் மாநிலத்திலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டது.


ஆனால், அவர் விரைவில் கனடா எல்லையை கடந்து அங்கிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக FBI தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் கடந்த மே மாதம் கைது வாரண்ட் பிறப்பித்தது.


பேடியை கைது செய்து தண்டனை பெற்றுத்தர வழிவகுக்கும் தகவல்களுக்கு 1.5 லட்சம் டாலர் வெகுமதி வழங்கப்படும் என FBI அறிவித்துள்ளது.


FBI கடந்த ஜூன் மாதம் ‘மோஸ்ட் வாண்டட் ஃபிராட்ஸ்டர்ஸ்’ பட்டியலை தொடங்கியது. தற்போது மஞ்சித் சிங் பேடி உள்ளிட்ட 12 பேர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Previous Next

نموذج الاتصال