புதுச்சேரி: புதுச்சேரியில் சூரியனைச் சுற்றி திடீரென ஒளிவட்டம் தோன்றிய காட்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
வானில் சூரியனைச் சுற்றி வட்ட வடிவில் ஒளிர்ந்த இந்த இயற்கை நிகழ்வை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் இந்த அரிய காட்சியை புகைப்படம் மற்றும் காணொளியாக பதிவு செய்தனர்.
வளிமண்டலத்தில் அதிக உயரத்தில் காணப்படும் பனித்துகள்கள் வழியாக சூரிய ஒளி விலகிச் செல்லும்போது இதுபோன்ற ஒளிவட்டம் உருவாகும். இந்த நிகழ்வு பொதுவாக சூரிய ஒளிவட்டம் அல்லது ‘சன் ஹாலோ’ என அழைக்கப்படுகிறது.
புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் சூரியனைச் சுற்றி தோன்றிய ஒளிவட்டம் தெளிவாகக் காணப்பட்டதால், பொதுமக்கள் வானத்தை நோக்கி இந்த இயற்கைக் காட்சியை ரசித்தனர்.
இந்த ஒளிவட்டம் சில நேரம் நீடித்த பின்னர் படிப்படியாக மறைந்தது. புதுச்சேரியில் திடீரென தோன்றிய இந்த சூரிய ஒளிவட்டக் காட்சி சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றது.
