தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்


 சென்னை: தமிழகத்தில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.


இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகவும், பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளை அமைக்க தமிழகத்தை முதன்மைத் தேர்வாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாகன உற்பத்தியிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. கோவையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் உற்பத்திப் பிரிவுகள் இயங்கி வருகின்றன.


சென்னைக்கு அருகில் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் மற்றும் கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே ஆகியவை மோட்டார் பந்தயத்துக்கான முக்கிய கட்டமைப்புகளாக உள்ளன. இங்கு தேசிய அளவிலான எஃப்-3, எஃப்-4 கார் பந்தயப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


தமிழகத்தில் உலகத் தரத்திலான மோட்டார் வாகன கார் பந்தயங்களுக்கான உற்பத்தி ஆலைகள் மற்றும் அதற்குத் தேவையான உப தொழிற்சாலைகளை அமைப்பதற்கான சூழல் உள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.


புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தில் சர்வதேச தரத்திலான பந்தயத் தடம், நவீன உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும். ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 உள்ளிட்ட சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்புகளும் உருவாக்கப்படும்.


இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்குவதுடன், விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த நகரம் அமையும் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.

Previous Next

نموذج الاتصال