ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் முதல் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கான பிரத்யேக படமெடுப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
GSLV-F17 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2.55 மணிக்கு ஏவப்பட்டது.
27 மணி நேர கவுன்ட்டவுனுக்குப் பிறகு ஏவப்பட்ட ராக்கெட்டில் 2,367 கிலோ எடை கொண்ட EOS-05 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டிருந்தது. GSLV-யின் 19-வது பயணமாக இந்த ஏவுதல் அமைந்தது.
ஏவப்பட்ட சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு, செயற்கைக்கோள் 190 கி.மீ.க்கும் அதிகமான உயரத்தில் உள்ள இடைநிலை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கைகள் மூலம் சுமார் 36,000 கி.மீ. உயரத்தில் உள்ள புவி ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு செயற்கைக்கோள் கொண்டு செல்லப்படும்.
புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் பூமியின் சுழற்சி வேகத்துக்கு ஏற்ப செயற்கைக்கோள் இயங்குவதால், இந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து நிகழ்நேரப் படங்களை வழங்க முடியும்.
குறைந்த புவி சுற்றுப்பாதையில் இயங்கும் பெரும்பாலான புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் மட்டுமே படங்களை வழங்கும் நிலையில், EOS-05 தொடர்ந்து கண்காணிக்கும் திறனை கொண்டுள்ளது.
விவசாயம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு இந்த செயற்கைக்கோள் முக்கியமான தகவல்களை வழங்கும்.
2021-ல் ஏவப்பட்ட EOS-03 செயற்கைக்கோள் திட்டம் தோல்வியடைந்த நிலையில், அதற்கு மாற்றாக EOS-05 உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் PSLV-C62 திட்டம் தோல்வியடைந்ததற்குப் பிறகு, சுமார் 8 மாத இடைவெளியில் இஸ்ரோ மேற்கொண்ட முக்கியமான ஏவுதலாக இது அமைந்துள்ளது.
