ஜேஎஸ்டபிள்யூ குழுமம் வணிக மின்சார வாகனத் துறையில் களம் இறக்கம்


 ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ‘ஆம்ப்ஸ்டார்’ என்ற புதிய பிராண்டில் வணிகப் பயன்பாட்டுக்கான மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகளை அறிமுகம் செய்துள்ளது.


மின்சார வாகன உற்பத்தித் துறையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் ஒரு பிரிவான ஜேஎஸ்டபிள்யூ கிரீன்டெக் நிறுவனம் இந்த வாகனங்களை வடிவமைத்து உற்பத்தி செய்ய உள்ளது.


ஆம்ப்ஸ்டார் மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகளின் அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. வணிகப் போக்குவரத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


வணிக வாகன உற்பத்திக்காக ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ரூ.2,500 கோடி முதலீடு செய்துள்ளது. மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மின்சார வாகன உற்பத்தித் தொழிற்சாலையில் ஆம்ப்ஸ்டார் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன.


முதல் கட்டமாக ஆண்டுக்கு 15,000 மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் திட்டமிட்டுள்ளது.


அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ஜேஎஸ்டபிள்யூ குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால், இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் வாகனங்களை இயக்குவதே நோக்கம் என தெரிவித்தார்.


உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதனைச் சார்ந்திருப்பதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Previous Next

نموذج الاتصال