சென்னையின் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான திட்டம் தற்போது தொடக்க நிலையிலேயே இருப்பதாக சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கும்போதே நீதிமன்றத்தை நாடுவதற்கான அவசரம் ஏன் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். மக்கள் மற்றும் மீனவர்களுக்கு எதிராக அரசு செயல்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் ஏற்கெனவே வெளிப்படையான விளக்கம் அளித்துள்ளதாக கூறிய நிர்மல் குமார், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் உரிய பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.
இதனிடையே, நிகழ்ச்சியில் நடப்பு கல்வியாண்டில் அரசு சட்டக் கல்லூரிகளில் எல்எல்எம் சேர்க்கைக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான திட்டம் குறித்து நீதிமன்றத்தில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
