பிஹாரில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கால் சுமார் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவரும், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
தொடர் கனமழை காரணமாக கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் பாட்னா உட்பட 15 மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
பாட்னாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தேஜஸ்வி யாதவ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளத்தில் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், அவர்களின் துயரத்தை அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.
வெள்ளப்பெருக்கை உடனடியாக தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிஹார் அரசு தலா ரூ.15,000 வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு பிஹாரில் வெள்ளப் பாதிப்புகளை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் ஆய்வு செய்திருந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் மத்திய அரசு சார்பில் ரூ.7,000 வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
பிஹாரில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளச் சூழலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
