தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செப்டம்பர் 21-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
செப்டம்பர் 22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். செப்டம்பர் 23, 24-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, செப்டம்பர் 22-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாளத்தில் அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
