மாடம்பாக்கம்: மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர், ஏஎல்எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களில் 16 தெருநாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
தெருநாய்கள் தொடர்ந்து உயிரிழந்தது அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், சேலையூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த தெருநாய்களின் உடல்களை கால்நடைத் துறையினர் கைப்பற்றி, உடற்கூறாய்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா அல்லது நோய் தாக்குதல் காரணமாக உயிரிழந்தனவா என்பது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாய்கள் உயிரிழந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
உயிரிழப்புக்கான உண்மையான காரணம் மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும் நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.