காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசின் சட்டத்துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதில் கடந்த காலத்தில் திமுக அரசு தவறியதாக தெரிவித்தார். காவிரி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்டங்களில் மாநிலத்தின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், கர்நாடகாவில் ஹேமாவதி, கபினி உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டபோது தமிழ்நாட்டின் நலனுக்காக உரிய எதிர்ப்பை திமுக அரசு வெளிப்படுத்தவில்லை என்றும், 1971-ல் தொடரப்பட்ட வழக்கு திரும்பப் பெறப்பட்டதையும், 1974-ல் காலாவதியான காவிரி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேகேதாட்டு அணைத் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகவும் தயங்காது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
காவிரி நீர் உரிமையை பாதுகாப்பதில் தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியானது என்றும், விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளும் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.