சாதிவாரி கணக்கெடுப்பு முறையை மாற்ற வேண்டும்: கார்கே, ராகுல் காந்தி


 புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பில் சாதி விவரங்களைச் சேகரிக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளனர்.


இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இருவரும் எழுதியுள்ள கடிதத்தில், சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த துல்லியமான சாதித் தரவுகள் அவசியம் என குறிப்பிட்டுள்ளனர்.


சாதிவாரி கணக்கெடுப்பில் சாதி விவரங்களைச் சேகரிப்பதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள கேள்விகள் தவறான வழிகாட்டும் தன்மையைக் கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக, சாதி விவரங்களைப் பதிவு செய்ய குறிப்பிட்ட தெரிவுகள் இல்லாத திறந்த வினா முறை பயன்படுத்தப்படுவதாகவும், இதில் மக்கள் தங்கள் சாதியின் பெயரை எவ்வாறு குறிப்பிடுகிறார்களோ அதன்படியே பதிவு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர்.


ஒரே சாதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்கள், துணைச் சாதிப் பெயர்கள் அல்லது உள்ளூர் பெயர்களால் அறியப்படலாம். இவற்றை அப்படியே பதிவு செய்தால், ஒரே சாதி ஆயிரக்கணக்கான பெயர்களாகப் பிரிக்கப்படும் நிலை ஏற்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனால் சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் உருவாகும் தரவுகளைப் பயன்படுத்துவது கடினமாகும் என்றும், ஒரு சமூகத்தின் உறுப்பினர்களின் சரியான எண்ணிக்கை பதிவு செய்யப்படாவிட்டால், அதன் நிலையும் தவறாக மதிப்பிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


தவறான தரவுகள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர விளிம்புநிலை சமூகங்களைப் பாதிக்கக்கூடும் என்பதால், தற்போதுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு வினாத்தாளை திரும்பப் பெற வேண்டும் என்றும், சாதி விவரங்களை விரிவாகச் சேகரிக்க மாற்று முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

Previous Next

نموذج الاتصال