மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு; நீர்மட்டம் உயர்வதில் சிக்கல்

 

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 14,674 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு 11,808 கனஅடியாக குறைந்தது.


அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.


நேற்று முன்தினம் மாலை 77.57 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று காலை 78.03 அடியாக உயர்ந்தது.


எனினும், அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில், நீர்மட்டம் உயர்வதிலும் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.


காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டிய சூழலில், அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.


தொடர்ந்து மழை பெய்து, காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Previous Next

نموذج الاتصال