பட்டாசு விபத்துகளைத் தடுக்க பரிந்துரைகள் தர ஆட்சியர், எஸ்பிக்கு உத்தரவு

மதுரை: சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான தேவையான பரிந்துரைகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.


சிவகாசி பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த 2014-ல் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.


விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவின்படி ஆகஸ்ட் 6-ம் தேதி விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் விபத்து தடுப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.


ஆனால், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் இதுவரை பரிந்துரைகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரிடம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும், இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 


Previous Next

نموذج الاتصال