புதுடெல்லி: இந்திய பார் கவுன்சிலின் நிர்வாக அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் எம். வரதன் தாக்கல் செய்துள்ள மனுவில், பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலம் தொடர்பாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்தப் பதவிகளுக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிலையான பதவிக்காலமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஒருவர் மூன்று முறைக்கு மேல் தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவியை வகிக்கக் கூடாது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் 20 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு பார் கவுன்சில் தலைவர் பதவியை வகிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் மண்டலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் வகையில் வெளிப்படையான சுழற்சி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
பார் கவுன்சிலின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய தேவையான கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.