ஒரு பைசாவில் தங்க மோதிரம் சாத்தியமா? டெண்டர் பின்னணி

 

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் செப்.15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.


இந்தத் திட்டத்தின் கீழ், ஜூன் 22-ம் தேதி முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களுக்கு 1,28,499 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.


இதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஜூலை 14-ம் தேதி கோரியது. இதில் 11 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.


தங்கத்தின் விலையைத் தவிர்த்து, ஒரு மோதிரத்துக்கான செய்கூலி, சேதாரம், காப்பீடு, பேக்கிங் மற்றும் பிஐஎஸ் தரமுத்திரை உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நிறுவனங்கள் விலையில் குறிப்பிட வேண்டும் என டெண்டர் நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதில் ஒரு பைசா என்ற குறைந்த விலைப்புள்ளியில் மோதிரம் செய்து தருவதாக தெரிவித்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 70 சதவீதமும், அதே விலையில் செய்து தர சம்மதித்த கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு 30 சதவீதமும் மோதிரங்கள் தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.


ஒரு கிராம் தங்க மோதிரத்துக்கு வழக்கமாக செய்கூலி மற்றும் சேதாரம் உள்ளிட்ட செலவுகள் இருக்கும் நிலையில், பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரைக்கு மட்டும் குறைந்தபட்சம் ரூ.45 செலவாகும். இதனால் ஒரு பைசாவில் அனைத்து செலவுகளையும் எவ்வாறு ஈடுகட்ட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


நகை நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய விளம்பர வாய்ப்பாக அமையும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், மோதிரங்களின் தரம் மற்றும் எடையில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

Previous Next

نموذج الاتصال